Published : 23 Jun 2018 09:59 PM
Last Updated : 23 Jun 2018 09:59 PM
சேலம்-சென்னை பசுமை விரைவுச்சாலை சீனாவில் உள்ள ஜி நகர பெண்களுக்கு பயன்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
சேலம்-சென்னை பசுமை விரைவுச்சாலை யாருக்காக அமைக்கப்படுகிறது, இங்கு அமைக்கப்படும் சாலை எதற்கு சீனாவில் உள்ள ஜி நகரில் வசிக்கும் பெண்களுக்கு பயன்பட வேண்டும் என்ற பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.
சென்னை-சேலம் இடையே புதிதாக 8 வழி பசுமை சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறது.
புதிய சாலை அமைக்கும் திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும், கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனாலும், சாலை அமைப்பதற்கு தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்துவதற்காக, நில அளவீடு செய்யும் பணியை வருவாய் துறையினர் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சேலம்-சென்னை பசுமை விரைவுச்சாலையின் சாத்தியக் கூறுகள் அறிக்கையை தனியார் நிறுவனமான பீட்பேக் இன்பிரா பிரைவேட் லிமிடட் நிறுவனத்திடம் கேட்டிருந்தது. இந்த நிறுவனம் முறையாக ஆய்வு செய்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை. இந்த திட்டம் குறித்து நெடுஞ்சாலைக்கு துறைக்கு பாலினம் மற்றும் மேம்பாடு என்ற துணைத் தலைப்பில் அறிக்கையை அளித்துள்ளது. அந்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் டெர்ம் ஆப் ரெப்ரன்ஸ் பிரிவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிளைப்பகுதியில் திட்டம் சார்ந்த பாலின பிரச்சினைகள் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், "இத்திட்டம் நகர்ப்புற சாலை கட்டமைப்பை மேம்படுத்தும். பொது போக்குவரத்தையும் மேம்படுத்தும்.
இதனால் பெண்களும் ஆண்களும் சரிசமமாக பயனடைவர். ஸி பகுதியில் பெண்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. எனவே இத்திட்டத்தை நிறைவேற்றுவதால் தரமான பாதுகாப்பான அதிகமான போக்குவரத்து சேவையை உறுதி செய்ய முடியும்" எனக் கூறப்பட்டிருக்கிறது.
சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் சாலை சீனாவில் உள்ள ஸி நகரில் உள்ள பெண்களுக்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது நகைப்புக்குரியதாக இருக்கிறது. அதாவது, ஸி நகரில் உள்ள பெண்கள் அதிக பெண்கள் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்குவந்தால், தரமான சாலை கிடைக்கும், அதிகமான முறையில் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷான்ஸி மாநிலத்தின் தலைநகர் ஸி நகரம். இப்போது எழும் கேள்வி எல்லாம், சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் சாலை எதற்கு சீனாவில் உள்ள ஸி நகர பெண்களுக்கு பயன்பட வேண்டும். அவர்களுக்கும் இந்த திட்டத்தில் உள்ள சாலைக்கும் என தொடர்பு.
ஒருவேளை அந்த தனியார் நிறுவனம் திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யாமல், எங்கிருந்தோ ‘கட் அன்ட் பேஸ்ட்’ செய்து இந்த அறிக்கையை அனுப்பி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
சீனாவில் உள்ள ஒரு நகரம் எப்படி தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சாலைத் திட்டத்தில் குறிப்பிட்டு பயன்படுத்த முடியும் என்று பீட்பேக் இன்பிரா கன்சல்டிங் நிறுவனத்திடம் தி இந்து(ஆங்கிலம்) சார்பில் கேட்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனத்தின் தலைவர் வெளியூரில் இருப்பதால், விரைவில் பதில் அளிக்கிறோம் என்று தெரிவித்துவிட்டனர்.
இந்த திட்டத்துக்கும், அறிக்கைக்கும் ஜுன் 8-ம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சகமும், வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவும்(இஏசி) அனுமதி அளித்துள்ளது
பீட்பேக் இன்பிரா நிறுவனம் அளித்த அறிக்கையில் சென்னை - சேலம் விரைவுச் சாலை குறித்து அந்த பகுதி மக்களிடம்,அதிகாரிகளிடன் உதவியுடன் ஆலோசனையும்,. அரசு அதிகாரிகளிடம் நேர்காணல் நடத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
சாலை அமையும் நிலப்பகுதியில் வாழும் மக்களிடம், பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் பெறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து பல்வேறு மக்கள் மிகவும் சாதகமான முறையில் பதில் அளித்துள்ளனர். குறிப்பாக தங்களுக்கு நல்லவிதமான வசதிகள், சந்தை வசதிகள் கிடைக்கும் அதன் மூலம் அதிகமான வாடிக்கையாளர்கள் கிடைப்பாளர்கள், பயணம நேரம் குறையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அரசியல் பிரச்சினைகளால் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுமா என்று கவலைத் தெரிவித்துள்ளனர். மீண்டும் மீண்டும் சர்வேக்கள் நடத்துவதைத் தவிர்த்து அவசரம் கருதி இந்த சாலையின் கட்டுமானத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT