Published : 04 Nov 2024 04:34 AM
Last Updated : 04 Nov 2024 04:34 AM

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை: வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

சென்னை: வாடகை வாகன ஓட்டுநர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக உரிமைக் குரல் ஓட்டுநர் சங்க பொதுச்செயலாளர் அ.ஜாஹிர்உசேன், தலைவர் இ.சே.சுரேந்தர் ஆகியோர் கூறியதாவது: தனியார் செயலி மூலம் இயங்கும் பன்னாட்டு போக்குவரத்து நிறுவனங்களால் வாடகை வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். அந்நிறுவனங்களின் கீழ் வாகனங்களை ஓட்டும்போது ரூ.2 ஆயிரம் சம்பாதித்தால் ரூ.400 கமிஷனாகவும், ரூ.100 ஜிஎஸ்டி வரியாகவும் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆட்டோக்களுக்கு கி.மீட்டருக்கு ரூ.11 மட்டுமே வழங்கப்படுகிறது. சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அதிக பாரத்தை ஏற்றிச் செல்ல வற்புறுத்துகின்றன.

ஒரே மாதிரியான கமிஷன்: எனவே அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியான கமிஷன் வசூலிக்க அரசு உத்தரவிட வேண்டும். வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் பணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிக்க கூடாது. ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். ஆட்டோக்களுக்கு தகுதிச் சான்று பெற ரூ.650 கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ள நிலையில், 2.5 மீ. ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு மட்டும் ரூ.650 வசூல் செய்யப்படுகிறது. நல்ல நிலையில் இருக்கும் ஸ்டிக்கரை கிழித்து புதிய ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டுமே தகுதிச்சான்று தரப்படுகிறது. இதில் பல கோடி ஊழல் நடக்கிறது.

வலுவான போராட்டங்கள்: எனவே இந்த விவகாரங்கள் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x