Published : 04 Nov 2024 12:34 AM
Last Updated : 04 Nov 2024 12:34 AM
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் குன்னூரில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. குன்னூரில் நேற்றுமுன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதனால் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக, கிருஷ்ணாபுரம் ஆற்றோர சாலை துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலை பெயர்ந்துவிழுந்த பகுதியில் 600 மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டன.
குன்னூர் 11-வது வார்டு பழைய மருத்துவமனை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. மேல் பாரத் நகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மண் சரிந்தது. பொதுமக்கள் பொக்லைன் இயந்திர உதவியுடன் காரை மீட்டனர்.
மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. காந்திபுரத்தில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியை, சார் ஆட்சியர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பொக்லைன் மூலமாக மண் சரிவை அகற்றும் பணி நடந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், ராட்சத பாறைகள் விழுந்துகிடக்கின்றன. இதனால் உதகை-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது. சீரமைப்பு பணி நிறைவடைந்தால் இன்று மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் சூறாவளிக் காற்றும் வீசியது. சிறுமுகை சாலை சங்கர் நகர் பகுதியில் 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சரிந்து சாலையில் விழுந்தன. இதனால் மேட்டுப்பாளையம் நகரின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரியத்தினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி வரையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்): கீழ் கோத்தகிரி -143, கோத்தகிரி -138, பர்லியார்- 123, குன்னூர் -105, கோடநாடு - 67, கெத்தை - 54, கிண்ணக்கொரை - 48, கேத்தி – 42, பந்தலூர் – 41, உதகை- 37.7, குந்தா – 28, அவலாஞ்சி – 21, எமரால்டு – 19, அப்பர் பவானி – 13.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT