Published : 03 Nov 2024 04:02 PM
Last Updated : 03 Nov 2024 04:02 PM
கரூர்: கரூரில் காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. நாளை (நவ. 4ம் தேதி) காவிரி அம்மன் நகர்வலம் மற்றும் அதனை தொடர்ந்து நெரூரில் காவிரி மகா ஆரத்தி பெருவிழா நடைபெறுகிறது.
அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் காவிரி நதியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 14 ஆண்டுளாக அன்னை காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகா மாநிலம் குடகு மலை தலை காவிரியில் இருந்து 7 கலசங்களில் எடுக்கப்பட்ட காவிரி துலா தீர்த்த ரத யாத்திரை, சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமையில் கடந்த அக். 20 ஆம் தேதி தொடங்கியது. ரதத்துடன் 14க்கும் மேற்பட்ட சந்நியாசிகள் பயணம் செய்கின்றனர். பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியை யாத்திரை நேற்று வந்தடைந்தது.
கரூர் மாவட்டத்திற்கு இன்று (நவ. 3ம் தேதி) காலை வந்த ரத யாத்திரைக்கு கரூர் முனியப்பன் கோயில் முன்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. கரூர் ரவிசங்கர்ஜி வாழும் மையம், கரூர் பசுமடம், கரூர் காந்தி நகர், பசுபதிபாளையம் ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இன்று (நவ. 4ம் தேதி) மாலை 6 மணிக்கு கரூர் காவிரி மகா ஆரத்தி பெருவிழா அகில பாரதீய சந்நிதியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமையில் கரூர் காவிரி குடும்பம், கரூர் அனைத்து ஆன்மீக அமைப்புகள் சார்பில் நெரூர் சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானம் காவிரி படித்துறையில் நடைபெறுகிறது.
முன்னதாக, மதியம் 3 மணிக்கு காவிரி அம்மன் நகர்வலம் கரூர் கல்யாண பசுதீஸ்வரர் சுவாமி கோயில் முன்பு பால்குடம், கோலாட்டத்துடன் தொடங்கி கரூர் கோடீஸ்வரர் சுவாமி கோயில் வரை நடைபெற்றது. கரூர் காவிரி குடும்பம் மாதாஜி சிவகற்பகாம்பாள், கரூர் மாவட்ட பொறுப்பாளர் சங்கர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். நவ. 13ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் தலைகாவிரியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டு யாத்திரை நிறைவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT