Published : 03 Nov 2024 03:09 PM
Last Updated : 03 Nov 2024 03:09 PM
தாம்பரம்: தாம்பரம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர், இருசக்கர வாகனத்தை ஓட்டியபடி போட்டோ சூட் எடுத்தபோது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி, திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சார்ந்தவர் பாலாஜி. திமுக பிரமுகரான இவரது மகன் டெல்லி பாபு (எ) விக்கி (19) சேலையூர் பாரத் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நந்திவரம் - கூடுவாஞ்சேரி பகுதியில் திமுக மாணவரணி நிர்வாகியாகவும் இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் தனது நண்பர் சக்தி பாலன் என்பவரது இரு சக்கர வாகனத்தை வாங்கி கொண்டு வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலையில் எருமையூர் என்ற இடத்தில் சர்வீஸ் சாலையில் பைக் ஓட்டுவது போல் பல வடிவங்களில் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது பூந்தமல்லி, முத்துக்குமரன் நகர் பகுதியை சார்ந்த தேஜாஸ் (18) என்பவர் இவர் போட்டோ சூட் எடுப்பதை கவனித்துக் கொண்டே அவர் மீது வேகமாக மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட டெல்லி பாபு சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சோமங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஃபோட்டோ ஷூட் எடுக்கும்போது டெல்லி பாபு ஹெல்மெட் அணியாமல் பல்வேறு கோணங்களில் பைக் ஓட்டிக்கொண்டே போட்டோ சூட் எடுத்ததால் எதிர்பாராத விதமாக அதனை வேடிக்கை பார்த்து வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
வண்டலூர் வெளிவட்ட சாலையில் தினமும் ஏராளமான இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவது போட்டோ சூட் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெளிவட்ட சாலையில் பல்வேறு காவல் நிலைய எல்லைகள் வருவதால் யாரும் சரியாக கவனிப்பதில்லை. எனவே, போக்குவரத்து போலீஸார், ரோந்து வாகனங்கள் இப்பகுதியில் அதிகமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த டெல்லி பாபுவின் உடலுக்கு நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT