Published : 03 Nov 2024 12:39 PM
Last Updated : 03 Nov 2024 12:39 PM

அக்டோபருக்குள் நடத்தி முடிக்கப்பட்ட 19 அரசு பல்கலை. பட்டமளிப்பு விழா - ஆளுநர் மாளிகை பெருமிதம்

கோப்புப் படம்

சென்னை: தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மாணவர்கள் உடனடியாக பட்டப்படிப்புச் சான்றிதழ்களை பெறும் நோக்கில் ஆளுநர் ஆர்.என். ரவியின் முன் முயற்சி காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் அக்டோபர் மாத இறுதிக்குள் 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர். என். ரவி, மாநில அரசுப் பல்கலைக்கழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், பல்கலைக்கழகங்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதை உறுதிப்படுத்திடவும், அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழாவினை குறித்த நேரத்தில் நடத்தினார்.

20 மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என். ரவி, நமது மாநிலத்தில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டில் நிலைக்கொண்டும் நமது மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் அக்டோபர் 31, 2024 ஆம் தேதிக்குள் அனைத்து பல்கலைக்கழங்களிலும் வருடாந்திர பட்டமளிப்பு விழாவை நடத்தி முடித்திட அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையில் கடந்த 09 செப்டம்பர் 2024 அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (கோயம்புத்தூர்) பட்டமளிப்பு விழா தொடங்கி, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (நாகப்பட்டினம்), சென்னைப் பல்கலைக்கழகம் (சென்னை) ஆகியவற்றின் பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகித்தார்.

அத்துடன் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (சென்னை), தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (சென்னை), தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (சென்னை), திருவள்ளுவர் பல்கலைக்கழகம் (வேலூர்), பாரதியார் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), பெரியார் பல்கலைக்கழகம் (சேலம்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (சிதம்பரம்), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (சென்னை), மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (மதுரை), அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (கொடைக்கானல்), தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் (சென்னை), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (திருநெல்வேலி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), அழகப்பா பல்கலைக்கழகம் (காரைக்குடி) மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் (திருச்சிராப்பள்ளி) ஆகிய 19 அரசுப் பல்கலைக்கழகங்களின் வருடாந்திர பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

ஆளுநரும் வேந்தருமான ஆர்.என். ரவி, 7,918 மாணவர்களுக்கு நேரில் (In-Person) பட்டங்களை வழங்கியும், 8,20,072 (இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் மற்றும் அறிவியல் முனைவர் பட்டங்கள் உட்பட) மாணவர்களுக்கு பட்டங்களை ஆளில்லா நிலையில் (In-Absentia) வழங்கியும் உள்ளார். ஆக 19 அரசுப் பல்கலைக்கழகங்களில் மொத்தம் 8,27,990 பட்டதாரிகள் தங்கள் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

எஞ்சியுள்ள சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளின் பேரிலும், அப்பாட திட்டங்களின் காலமுறையைக் கருத்தில் கொண்டும் அதன் பட்டமளிப்பு விழாவை வருகின்ற நவம்பர் 20, 2024 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்றைய போட்டிச் சூழலில், மாணவர்களுக்கு சரியான நேரத்தில் பட்டமளித்தல் உள்ளிட்ட குறித்த காலத்திலான கல்வி செயல்பாடுகள், மாணவர்கள் மேலும் பல வாய்ப்புகளைப் பெறுவதற்கு மிகவும் அவசியம். இந்த முன்முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், கல்விசார் சிறப்பையும் மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் ஒரு கல்வி கலாச்சாரத்தை வளர்த்து, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நமது மாணவர்கள் நன்கு தயாராக இருப்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆளுநர்-வேந்தர் ஆர்.என். ரவி, அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழா இனிவரும் ஆண்டுகளில் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த செயலூக்கமான அணுகுமுறை மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு பட்டப்படிப்புச் சான்றிதழ்களை உடனடியாகப் பெறுவதற்கு வழிவகை செய்கிறது மற்றும் அவர்கள் வாய்ப்புகளைத் தாமதமின்றிப் பயன்படுத்தவும் உதவுகிறது. தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, மாணவர்களை தங்கள் முயற்சிகளில் வெற்றிப் பெற செய்ய மேற்கொண்ட உறுதிப்பாட்டின்படி, 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்களை குறிப்பிட்ட அக்டோபர் மாதம் 2024 இறுதிக்குள் நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x