Published : 03 Nov 2024 10:37 AM
Last Updated : 03 Nov 2024 10:37 AM
சென்னை: பிராட்வே பேருந்து நிலைய புனரமைப்பு பணி காரணமாக, அப்பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ராயபுரத்துக்கு மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையில் பழமையா னது பிராட்வே பேருந்து நிலையம். நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இப்பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.823 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
நவீன பேருந்து நிலையம்: இந்த புனரமைப்பு பணிகளுக்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட உள்ளன. பின்னர் அங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோன்று பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.
அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தும் இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணியை சென்னை மெட்ரோ ரயில்வே, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன.
கடைகள் இடமாற்றம்: பிராட்வே பேருந்து நிலைய புனரமைப்பு பணிகளுக்காக, அந்த பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ராயபுரம் என்.ஆர்.டி.மேம்பாலம் அருகே உள்ள சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து, டெண்டர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, "ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணியை நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் முதல் வாரத்தில் முழுமையாக பிராட்வே பேருந்து நிலையத்தை அங்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட் டுள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் 45 குடும்பங்களை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT