Published : 04 Jun 2018 12:14 PM
Last Updated : 04 Jun 2018 12:14 PM

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இரண்டு ஆண்டுகாலம் எப்படி?- மனம் திறந்த கிரண்பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது இரண்டாண்டு பதவிக்காலத்தில் ஆளுங்கட்சியுடன் ஏற்பட்ட மோதல்கள் முதல் புதுச்சேரிக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கான செயற்திட்டத்தை உருவாக்கியுள்ளது வரை பல்வேறு கேள்விகளுக்கும் சுவாரஸ்யமான பதில்களை அளித்திருக்கிறார்.

தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டியின் சாராம்சம்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறீர்கள். இந்த இரண்டு ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

இது ஓர் அரிதான வாய்ப்பு. இந்த வாய்ப்பு புதுச்சேரிக்கு சேவை செய்யவும் அச்சேவை வாயிலாக நான் சில படிப்பினைகளைப் பெறவும் வழிவகை செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது எது என்பது குறித்தும் மக்கள் அவர்கள் உரிமையைப் பெற எது முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பது குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் அரியச் செய்துள்ளது. ஒரு நம்பிக்கையூட்டும் நிலைமையை உருவாகியுள்ளது.

ஒரு துணைநிலை ஆளுநராக மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தை அமல்படுத்துவதிலும், நீராதாரங்களை மீட்டெடுப்பதிலும் நீங்கள் இந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளீர்கள்... இவைதவிர உங்களது சாதனை என எதைக் கூறுவீர்கள்?

சாதனைகள் பற்றி நீங்கள் என்னிடம் கேள்வி எழுப்புவதில் அர்த்தமில்லை. நீங்கள் மக்களிடம் ஒரு கேள்வி கேளுங்கள்.. இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் என்னமாதிரியான வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறார்கள்? எனக் கேள்வி எழுப்புங்கள்.

குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என நீங்கள் கருதிய ஏதாவது ஒரு திட்டத்தையோ அல்லது ஒரு முடிவையோ அமல்படுத்தமுடியாமல் போயிருக்கிறதா? அது குறித்த வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?

எந்த வருத்தமும் எனக்கில்லை. நன்றி உணர்வு மட்டுமே இருக்கிறது.

அரசாங்கத்துடன் நல்ல உறவு இருந்திருந்தால் மக்கள் நலனைப் பேணுவதில் பெரும் பயனளித்திருக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா?

தற்போதைய சூழலில் இது கொஞ்சம் வித்தியாசமாகக்கூட இருக்கலாம். எனவே, இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்பாக இயங்குவது என்பதே சவால். புதுச்சேரிக்கு சேவை செய்வது என்பது ஒருவித காரணத் தொடர்புடையதாகிவிட்டது.

அரசாங்கத்துடனான உங்களது கடின காலக்கட்டத்தைப் பற்றிக் கூறுங்கள். முதல்வர் பொதுவெளியில்கூட உங்களை விமர்சித்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அன்றாடம் செயல்பாடுகளில் ஜனநாயகத்துக்கு விரோதமாக நீங்கள் தலையிடுவதாகக் கூறியிருக்கிறார். நீங்கள் இருவருமே அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டே இந்தப் பதவிக்கு வந்துள்ளீர்கள். அப்புறம் ஏன் இந்தப் பிளவு?

நாங்கள் இருவருமே சட்டதிட்டத்துக்கு உட்பட்டு நடக்கிறோம் என்றே கூறிவருகிறோம். நான் இந்தப் பிரச்சினையில் நீதிபதிபோல் கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் சட்டத்திட்டங்களைப் பின்பற்றியே எனது கடமைகளை ஆற்றுகிறேன். துணைநிலை ஆளுநர் என்ற வகையில் எனக்கு எந்த சிறப்பு சட்ட சலுகைகளும் இல்லை.

புதுச்சேரியின் நிதிநிலைமை குறித்து உங்களது மதிப்பீடு என்ன?

நிலையற்றதாக இருக்கிறது. அதை சீர்தூக்க நேர்மையான ஞானத்துடன் கடினமான உழைப்பு தேவை.

இங்கே ஆட்சியில் இருக்கும் ஆளுங்கட்சியைக் காட்டிலும் உங்களது பதவி மத்திய அரசுடன் நெருங்கிய தொடர்புள்ளது. அப்படி இருக்கும்போது நிதிச்சிக்கலைத் தீர்க்க நீங்கள்தான் அதிகமாக முயன்று இருக்க வேண்டும் என அமைச்சகம் கூறுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

இது அவர்களின் பார்வை. நீங்கள் எந்த அமைச்சகத்தைக் குறிப்பிட்டுக் கூறுகிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. இப்போது இருக்கும் நிலையில் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் சிறப்பாகவே செய்திருக்கிறேன்.

மக்கள் பார்வையில், நீங்களும் முதல்வரும் அரசு நிர்வாகத்தில் இணக்கத்துடன் செயல்பட்டிருந்தால் புதுச்சேரிக்கு நிறைய நற்பலன்கள் கிடைத்திருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

இணக்கமான செயல்பாடு என்று நீங்கள் எதைக் குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் எனது பொறுப்பை நன்கு உணர்ந்து சேவை செய்யவே இங்கு வந்துள்ளேன்.

சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் அரசாங்கத்தின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தீர்கள். சமூகவளத் துறை அமைச்சரை குறிவைத்து குற்றம் சொன்னீர்கள். அந்தப் புகார்கள் மீது நீங்கள் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்தீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா?

என்னிடம் வந்த எல்லாப் புகார் மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன. தேவை ஏற்படும்போதெல்லாம் நான் ஓர் விசில் ஊதியாகவே இருந்திருக்கிறேன். சில நேரங்களில் சிபிஐ, லஞ்ச ஒழிப்புத் துறையின் தலையீடு போன்ற துல்லிய நடவடிக்கைகள் தேவைப்பட்டன. அவை பலனளித்திருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் நீங்கள் மக்களுக்கு எழுதிய ஒரு திறந்த மடலில் மே மாதத்தில் பணியிலிருந்து விடைபெறுவதாகக் கூறியிருந்தீர்கள். முதல்வர்கூட உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்குமாறு உங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாரே..

புதுச்சேரிக்கு சேவை செய்வது காரணமுடையதாகிவிட்டது. நான் என்னுடன் இதை தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

அடுத்தாண்டுக்கான உங்களது திட்டம்?

புதுச்சேரியின் வளர்ச்சிக்கு என ஒரு பிரத்யேக திட்டத்தை செயல்படுத்தவுள்ளேன். நடைமுறை சாத்தியமுள்ள அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மக்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்படும்.

- தமிழில் பாரதி ஆனந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x