Published : 03 Nov 2024 01:15 AM
Last Updated : 03 Nov 2024 01:15 AM
வால்பாறை: தேயிலைத் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, நவீன இயந்திரத்தின் மூலம் தேயிலை பறிக்கும் பணியில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.
கோவை மாவட்டம் வால்பாறையைச் சுற்றியுள்ள பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இதுதவிர, காபி, ஏலம், மிளகு ஆகியவைகளும் பயிரிடப்பட்டுள்ளன. பல்வேறு எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலைத் தூள், கோவை, கொச்சி, குன்னூரில் செயல்படும் ஏல மையங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், விலைவாசிக்கு ஏற்ற சம்பளம் கிடைக்காததால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியிலிருந்து வெளியேறி, தொழில் நகரமான திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க எஸ்டேட் நிர்வாகங்கள் அசாம், பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்துவந்து, தேயிலை பறிக்கும் பணியில் அமர்த்தியுள்ளன.
மேலும், பசுந்தேயிலையைப் பறிக்க நவீன இயந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர். இதனால் குறைவான ஆட்களைக் கொண்டு அதிக அளவில் தேயிலை பறிக்க முடிகிறது.
இதுகுறித்து தேயிலை தோட்ட அதிகாரிகள் கூறும்போது, “தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட நவீன இயந்திரத்தைப் பயன்படுத்துகிறோம். இதனால் 30 தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணியை 4 தொழிலாளர்கள் செய்கின்றனர்.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் வந்தாலும், சீசன் காலங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு தொடர்ந்து வெளியேறினால், தேயிலை பறிப்பு முழுவதும் இயந்திரமயமாகி விடும் நிலை ஏற்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT