Published : 02 Nov 2024 09:23 PM
Last Updated : 02 Nov 2024 09:23 PM
தாம்பரம்: தமிழகம் முழுவதும் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கல்லறைக்கு சென்று உயிரிழந்தவர்களின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் திரளான கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கல்லறை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கல்லறைத் தோட்டங்களில் உள்ள முன்னோர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவர். மேலும், ஜெப வழிபாடு, சிறப்பு ஆராதனையும் நடைபெறும்.
அந்த வகையில், கத்தோலிக்க திருச்சபையினர் சார்பில் தாம்பரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் உயிரிழந்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்தும், மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர்.
செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று முன்னோர்கள் மற்றும் உறவினர்கள் நினைவாகவும் அவர்களின் ஆத்மா சாந்தி பெற உறவினர்கள் பிரார்த்தனை செய்தனர். கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் வண்ண வண்ண பூக்களை கொண்டு கல்லறையை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தியும், அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை படைத்தும் குடும்பத்துடன் பிரார்த்தனை நடத்தினர்.
பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கினர். மேலும் இதனையொட்டி கல்லறை தோட்டம், மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் முன்னோர்கள் நினைவாக சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதேபோல் மாவட்டம் முழுவதும் கத்தோலிக்க திருச்சபையினர் சார்பில் கல்லறை திருநாள் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT