Published : 02 Nov 2024 09:19 AM
Last Updated : 02 Nov 2024 09:19 AM
சென்னை: “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?” என்று தவெக தலைவர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை கடுமையாக சாடியுள்ளார். விஜய் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு முன்புவரை அக்கட்சியுடனான கூட்டணி வாய்ப்புகள் குறித்து திறந்த மனதுடன் பேசிவந்த சீமான் மாநாட்டில் விஜய் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று பேசியதிலிருந்தே விமர்சனங்களை முன்வைக்கலாகினார். இப்போது வெளிப்படையாக மேடையிலேயே விஜய்யை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு நாளை ஒட்டி சென்னையில் நேற்று (நவ.1) நடந்த நாதக பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்கிறார். ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சேற்றில் கால் வைக்க வேண்டும். இது என்ன ரெண்டிலும் ஒவ்வொரு கால் வைப்பது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?. அண்மையில் வந்த படத்தில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் அவரே நடித்ததால் குழம்பிவிட்டார் போல். நீங்கள் சொல்வது கொள்கையே இல்லை. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. ஒரு சாலையில் இடதுபுறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி மோதிவிடும். திராவிடமும், தேசியமும் ஒன்று என்பது நடுநிலை இல்லை. மிகக் கொடுமையான நிலை.
நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் அல்ல. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். நான் குட்டிக் கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிதான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்க வேண்டும். நாங்கள் படித்து அதில் பி.ஹெச்டியே வாங்கிவிட்டோம். சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி. இது நெஞ்சு டயலாக்.
எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம். 2026 ஆம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது.” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் அக்.27-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து பேசிய விஜய், “கொள்கை கோட்பாட்டு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து.” எனப் பேசியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT