Published : 02 Nov 2024 03:48 AM
Last Updated : 02 Nov 2024 03:48 AM
சென்னை / சிவகாசி: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ரூ.60,000 கோடியை தாண்டியதாக தெரியவந்துள்ளது. இதனால், வியாபாரிகள், விற்பனையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலமாக இருந்தாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை என்பதால், தீபாவளி விற்பனை களைகட்டியது. சென்னை மட்டுமின்றி, மதுரை, கோவை, சேலம், நெல்லை, தஞ்சாவூர், நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விற்பனை அமோகமாக நடந்தது.
தீபாவளி பண்டிகையில் முக்கிய இடம்பெறுவது ஜவுளி. மக்கள் தங்களுக்கு பிடித்த ஜவுளிகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் ஆன்லைன் வர்த்தகமும் சூடுபிடித்தது. அதேநேரம், சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உட்படபல்வேறு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் கடந்த 2 வாரங்களாக கூட்டம் அலைமோதியது. பிரபல நிறுவனங்களின் துணி ரகங்களுக்கு தீபாவளியை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்ததால், அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் ஜவுளி ரகங்களை வாங்கினர்.
சாலையோர கடைகளிலும் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இந்த தீபாவளிக்கு மாநிலம் முழுவதும் சுமார் ரூ.27 ஆயிரம் கோடிக்கு ஜவுளி விற்பனை நடந்திருக்கும் என மதிப்பிடப்படுகிறது. தீபாவளிக்காக வீடுகளில் அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் செய்யப்பட்டாலும், மில்க் ஸ்வீட், வித்தியாசமான மைசூர்பாக் மற்றும் பல்வேறு வகையான இனிப்புகளை வாங்குவதற்காக இனிப்பகங்களிலும் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதுதவிர கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறைந்த விலைக்கு தரமான இனிப்பு, கார வகைகள் செய்து கொடுப்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து பலகாரங்களை விற்பனை செய்தனர். மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் இனிப்புகள் விலை சற்று அதிகமாகவே இருந்தது. இனிப்பு, கார பலகாரங்கள் விற்பனை சுமார் ரூ.10 ஆயிரம் கோடி வரை நடந்ததாக கூறப்படுகிறது.
தீபாவளியும், அமாவாசையும் ஒரே நாளில் வந்தால், பலரும் அன்றைய தினம் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஆனால், இந்த ஆண்டு அடுத்தடுத்த நாட்கள் வந்ததால், அசைவ உணவை விரும்பி சாப்பிடுவோர் மிகவும் உற்சாகம் அடைந்தனர். வீடுகள்தோறும் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் குழம்பு என அசைவ உணவு வகைகளை சமைத்து, உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடினர். உளூந்தூர் பேட்டை, திருச்சி சமயபுரம், கோவில்பட்டி அடுத்த எட்டயபுரம், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர், சேலம் மாவட்டம் வீரகனூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
தங்கம் விற்பனையை பொருத்தவரை, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கம் மட்டுமின்றி, வைரம், பிளாட்டினம், வெள்ளி விற்பனையும் சேர்த்து சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு நடந்ததாக கூறப்படுகிறது. இதுதவிர, பூக்கள், பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள், மின்னணு சாதனங்கள், செல்போன்கள், வீட்டு உபயோக பொருட்கள், அழகுசாதன பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் அமோகமாக நடந்தது. மொத்தத்தில் தீபாவளி விற்பனை ரூ.60,000 கோடியை தாண்டியதால் வியாபாரிகள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பட்டாசு விற்பனை ரூ.6,000 கோடி: சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1,080-க்கும் மேற்பட்ட ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பெரும்பாலானோர் தீபாவளியை மையப்படுத்தியே பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 450 வகையான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவீதத்துக்கும் மேல் சிவகாசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு அடிக்கடி ஏற்பட்ட விபத்துகள், சிறு பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம், அதிகாரிகளின் தொடர் ஆய்வு, தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தியாளர்கள் சிரமங்களை சந்தித்தனர். சரவெடிக்கு தடை, பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை உள்ளிட்ட காரணங்களால் பலவகை பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. அதை ஈடுகட்ட, பேன்ஸி ரக பட்டாசுகளில் பல புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தீபாவளிக்காக மட்டும் 15 வகையான புதிய ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
நவராத்திரியின்போதே வட மாநிலங்களில் பட்டாசுகள் விற்பனை தீவிரமடைந்தது. தொடர்ந்து, தீபாவளி ஆர்டர்கள் குவிந்தன. சரக்கு வாகனங்களில் நாடு முழுவதும் பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில், நாடு முழுவதும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்த 90 சதவீதத்துக்கும் அதிகமான பட்டாசுகள் விற்பனையாகிவிட்டன. ரூ.6,000 கோடிக்கு மேல் பட்டாசு வர்த்தகம் நடைபெற்றதாக வரும் தகவலால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்ஃபாமா) தலைவர் கணேசன் கூறும்போது, “பல்வேறு காரணங்களால், வெரைட்டி ரக பட்டாசுகள் உற்பத்தி குறைந்து, அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும், கடந்த ஆண்டுபோலவே தற்போதும் விற்பனை அமோகமாக நடந்துள்ளது. உற்பத்தி செய்த பட்டாசுகளில் 90 சதவீதத்துக்கு மேல் விற்பனையாகி இருப்பது, பட்டாசு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்” என்றார்.
டாஸ்மாக் விற்பனை குறைவு: தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 30-ம் தேதி ரூ.202.59 கோடிக்கும், தீபாவளி நாளான 31-ம் தேதி ரூ.235.94 கோடிக்கும் மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், அக்டோபர் 30, 31 ஆகிய 2 நாட்களில் மட்டும் ரூ.438.53 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.29 கோடி குறைவு என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT