Published : 02 Nov 2024 04:21 AM
Last Updated : 02 Nov 2024 04:21 AM
சென்னை: சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 213 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.
தமிழகத்தில் தீபாவளியை ஒட்டி பட்டாசு வெடிப்பதில் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. காலையும், மாலையும் 2 மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், பொதுமக்கள் அக்.30-ம் தேதி அன்று இரவு முதலே தெருக்களில் பட்டாசுகளை வெடித்தனர். அந்த வகையில் சென்னை மாநகரம் முழுவதும் வெடித்து சிதறிய பட்டாசுகளின் குப்பைக் கழிவுகள் வீதிகளில் குவிந்து கிடந்தன. ஒவ்வொரு வீட்டின் முன்பும் பட்டாசு குப்பை சாலைகளில் நிரம்பியிருந்தது.
இந்த குப்பையை அகற்றும் பணிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நாளொன்றுக்கு வழக்கமாக 5,500 மெட்ரிக் டன் குப்பை சென்னையில் சேகரிக்கப்படும் நிலையில், பட்டாசு வெடித்ததில் கூடுதலாக குப்பை குவிந்திருந்தது. இந்த குப்பையை பாதுகாப்பாக தரம் பிரித்து மாநகராட்சி ஊழியர்கள் அள்ளிச்சென்றனர்.
அந்த வகையில் சென்னை மாநகரில் தீபாவளி (அக்.31) முதல் நேற்று (நவ.1) மாலை 4 மணி வரை மொத்தமாக 213.61 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளன. அதிகபட்சமாக வளசரவாக்கம் பகுதியில் 21.69 மெட்ரிக் டன்னும், தேனாம்பேட்டையில் 20 மெட்ரிக் டன் பட்டாசு குப்பையும் அகற்றப்பட்டுள்ளது.
அதேபோல அண்ணாநகர் மண்டலத்தில் 19 மெட்ரிக் டன், அம்பத்தூர் 18.72 மெட்ரிக் டன், கோடம்பாக்கம் 18.50 மெட்ரிக் டன், திருவொற்றியூர் 17.45 மெட்ரிக் டன், அடையாறு 15.24 மெட்ரிக் டன், பெருங்குடி மண்டலத்தில் 13.81 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டது. குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூர் பகுதியில் 3.73 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை சேகரிக்கப்பட்டது.
இவ்வாறு சென்னை முழுவதும் சேகரிக்கப்பட்ட பட்டாசு குப்பை தரம் பிரிக்கப்பட்டு கும்மிடிபூண்டி, பெருங்குடி, கொடுங்கையூர் மாநகராட்சி கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT