Published : 09 Jun 2018 03:26 PM
Last Updated : 09 Jun 2018 03:26 PM
நீட் தேர்வுகளை எதிர்கொண்டு, அதில் தோல்வியுறும் மாணவர்களில் சிலர் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை எனும் முடிவை நோக்கி நகர்வது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு அனிதா, இந்த ஆண்டு பிரதீபா, சுபஸ்ரீ என வரிசை நீண்டுகொண்டே செல்ல, மேலும் சிலர் தற்கொலைக்கு முயன்று காப்பற்றப்பட்டிருக்கின்றனர்.
குறிப்பாக மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை முடிவை நோக்கிச் செல்வது பெற்றோர்களையும் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட மனநல மருத்துவர் சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, ''உலக அளவில் தற்கொலைக்கான முயற்சியில் ஈடுபடுபவர்கள் பெண்கள். அதேநேரத்தில் தற்கொலை முயற்சியில் முடிவை நோக்கிச் செல்பவர்கள் ஆண்கள். இயற்கையாகவே பெண்களுக்கு போட்டி மனப்பான்மை அதிகம். நாம் கூர்ந்து கவனித்தோமேயானால், மாணவர்களிடம் பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறோம். குறுகிய கால பயிற்சியினால் எதையும் சாதித்துவிட முடியும் நம்பிக்கையை ஏற்படுத்துவதும் தவறு. மருத்துவம், பொறியியல் என்ற மாயையை உருவாக்கிவிடுகிறோம். அது தவிர்த்து மாற்றுக் கல்விகள் குறித்து பள்ளி அளவிலேயே எடுத்துரைக்கவேண்டும்.
நாடு முழுக்க நடைபெறும் ஒரு போட்டித் தேர்வு எனும் போது, மாணவர்களிடம் அதை எதிர்கொள்ளும் விதத்தை சொல்லிக் கொடுக்கும் வேளையில், மாற்று வாய்ப்புகள் என்னென்ன உள்ளது என்பதையும் அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச் சொல்லிப் பக்குவப்படுத்திடவேண்டும். வாழ்க்கை கல்வி முறைகள் குறித்து அவ்வப்போது எடுத்துரைப்பதோடு, பள்ளிகளில் பன்முகத் திறன் பயிற்சி வகுப்புகளை கட்டாயமாக்கவேண்டும்.
தற்போது கல்வியில் மாறிவரும் சூழலுக்கேற்ப மாணவர்களை தயார்ப்படுத்துதல், பயிற்சி பெறும் இடங்களிலேயே அவர்களை பக்குவப்படுத்துதல், விளிம்பு நிலை மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால் மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்களைத் தடுக்க முடியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT