Published : 02 Nov 2024 02:29 AM
Last Updated : 02 Nov 2024 02:29 AM
சென்னை: தமிழகத்தில் விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்பது உள்ளிட்ட காரணங்களால் விளைநிலங்கள் தென்னந்தோப்புகளாக மாறி வருகின்றன. இதனால் தென்னங்கன்றுகளுக்கு கூடுதல் தேவை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு தென்னங்கன்று உற்பத்தியைப் பெருக்க தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தென்னை உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கடந்தாண்டு தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தில் மண்டல தென்னை நாற்றுப் பண்ணைகள், செயல் விளக்கத் திடல்கள் மற்றும் எருக்குழி அமைத்தல், தென்னந்தோப்பில் மறுநடவு, புத்தாக்கம் போன்றவற்றுக்காக ரூ13 கோடியே 89 லட்சம் செலவிடப்பட்டது. இந்த ஆண்டிலும் இத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன.
கோவை மாவட்டம் ஆழியாறு, கடலூர் - நெய்வேலி, ஈரோடு - பவானிசாகர், காஞ்சிபுரம் - பிச்சிவாக்கம், கன்னியாகுமரி - புத்தளம், கிருஷ்ணகிரி - புதூர், மயிலாடுதுறை - மல்லியம், புதுக்கோட்டை - வெள்ளாளவிடுதை, ராமநாதபுரம் - தேவிபட்டினம், உச்சிப்புளி, ராணிப்பேட்டை - நெளலாக், சேலம் - டேனிஷ்பேட்டை, சிவகங்கை - எஸ்.வி.மங்களம், தென்காசி - வடகரை, செங்கோட்டை, தேனி - வைகை அணை, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை, திருவாரூர் - வடுவூர், தூத்துக்குடி - கிள்ளிக்குளம், விருதுநகர் மாவட்டம் - தேவதானம் ஆகிய 20 இடங்களில் மாநில தென்னை நாற்றுப்பண்ணைகள் உள்ளன.
இப்பண்ணைகளில் பல்வேறு ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தென்னை நாற்றுப் பண்ணைகளில் 3 விதமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நெட்டை ரக தென்னங்கன்று 6 முதல் 7 ஆண்டுகளில் காய் காய்க்கும். நெட்டை - குட்டை ரகதென்னங்கன்றில், நெட்டை பெண் மரமாகவும், குட்டை ஆண் மரமாகவும் இருக்கும். குட்டை - நெட்டை ரக தென்னங்கன்றில், குட்டை ஆண்மரமாகவும், நெட்டை பெண் மரமாகவும் இருக்கும். இந்த கலப்பின ரகங்கள் 3 முதல் 4 ஆண்டுகளில் விளைச்சலுக்கு வரும்.
தென்னை நாற்றுப் பண்ணைகளில் தென்னங்கன்றுகள் உற்பத்திக்கு 8 முதல் 10 மாதங்கள் ஆகும். இப்பண்ணைகளில் தற்போது 6 முதல் 8 மாதத்துக்கு மேற்பட்ட தென்னங்கன்றுகள் விற்பனைக்கு உள்ளன. நெட்டை ரகதென்னங்கன்று ரூ.65-க்கும், நெட்டை - குட்டை ரக தென்னங்கன்று ரூ.125-க்கும் விற்கப்படுகின்றன. நெட்டை ரக தென்னங்கன்றுகள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 388, நெட்டை - குட்டை ரக தென்னங்கன்றுகள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 113 என மொத்தம் 3 லட்சத்து 59 ஆயிரத்து 501 தென்னங்கன்றுகள் இருப்பில் உள்ளன.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் நாற்றுப்பண்ணையில் மட்டும் குட்டை - நெட்டை ரக தென்னங்கன்றுகள் 600 உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT