Published : 01 Nov 2024 08:11 PM
Last Updated : 01 Nov 2024 08:11 PM
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தீபாவளிக்காக திமுகவினர் ரூ.250 கோடி செலவு செய்துள்ளதாக தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த சில நாட்களுக்கு முன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில், சனாதன தர்மத்தை ஒரு பக்கம் எதிர்த்து பேசிக்கொண்டு, இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணித்து வரும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், திமுக கட்சி நிர்வாகிகளுக்கு தமிழக முழுக்க தீபாவளி பரிசு பொருட்கள் வாரி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஒன்றிய மற்றும் பகுதி செயலாளர்கள், மேயர், சேர்மன் முதல் கவுன்சிலர் வரை ஒவ்வொருவரும் தனித்தனியாக, தீபாவளி பட்டாசு இனிப்புகள், குவாட்டர் முதல் மட்டன், சிக்கன் கறி பார்சல் வரை அனைத்தையும் அமோகமாக வழங்கி தீபாவளி திருவிழாவுக்கு தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். இவ்வாறு ரூ.250 கோடிக்கு மேலாக திமுகவினர் செலவு செய்துள்ளனர்.
அதேநேரம், கட்சி தான் குடும்பம், குடும்பம் தான் கட்சி என்று சொல்லக்கூடிய தமிழகம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கொளத்தூர் தொகுதியில் தன் பங்குக்கு எதுவும் செய்யவில்லை என்று அந்தத் தொகுதி திமுக நிர்வாகிகளிடையே வருத்தம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ‘நம்பிக்கை உள்ளவர்களுக்கும், கொண்டாடுபவர்களுக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அவருக்கே உரிய வெறுப்பு அரசியல் பாணியில் உற்சாகம் குறைந்து வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
சாதி,மத இன, மொழி பாகுபாடு இன்றி உற்சாகப்படுத்தி மகிழ்வித்து வாழ்த்துக்களை பரிமாறுவது தான் தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, அரசியல் நாகரிகம் என்பதை துணை முதல்வர் உதயநிதி புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் அரசியலுக்காக, ஓட்டு அரசியலுக்காக, தன்னுடைய கட்சியின் தொண்டர்களை கட்டிக் காப்பாற்ற, ஏமாற்ற, தீபாவளி பரிசு கொடுத்து உற்சாகப்படுத்த சொல்லி அமைச்சர்களுக்கும் கட்சியினருக்கும் ஒரு பக்கம் கட்டளையிட்டு,மறுபக்கம் சிறுபான்மையினரை திருப்திப்படுத்த முதல்வரும் துணை முதல்வரும் போடும் நாடகங்கள் இனி தமிழகத்தில் எடுபடாது” என அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT