Published : 01 Nov 2024 12:18 PM
Last Updated : 01 Nov 2024 12:18 PM
திருப்பூர் : திருப்பூரில் நள்ளிரவில் பெய்த கனமழையால், ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக 80-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டு பகுதி கேவிஆர் நகர், தந்தை பெரியார் நகரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று (நவ.1) அதிகாலை 2 மணிக்கு சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால், அங்குள்ள ஜம்மனை ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள 80-க்கும் மேற்பட்ட வீடுகளில் திடீரென வெள்ள நீர் புகுந்தது. இதில் பொதுமக்கள் வீடுகளில் இருந்த பொருட்கள் தண்ணீரில் நாசம் அடைந்தன.
வீடுகளில் இருந்து எலெக்ட்ரிக் பொருட்கள் பள்ளி குழந்தைகளின் புத்தகங்கள், தீபாவளி பட்டாசுகள் புத்தாடைகள் என அனைத்துமே வெள்ளநீரில் நனைந்தன. வீடுகளுக்குள் இடுப்பு அளவு வரை தண்ணீர் சென்றபோதும் பொதுமக்கள் உடனடியாக விழித்துக் கொண்டதால் உயிர்சேதம் ஏதும் இல்லை. வெள்ளநீரோடு சாக்கடை நீரும் புகுந்து உள்ளதால் அங்குள்ள வீடுகளில் கடும் துர்நாற்றம் வீசின. பொதுமக்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 50-வது வார்டு காங்கேயம்பாளையம் புதூர் , ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் குமார் (35) என்பவரது வீட்டில் ஒரு பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நால்வரும் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டனர். தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் குமார் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவரது மனைவி சசிகலா (32) கீர்த்தனா (9) கிஷோர் (13) காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதி மாமன்ற உறுப்பினர் அன்பகம் திருப்பதி மற்றும் பகுதி விஏஓ ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை உணவு வழங்கவும் , மளிகை பொருட்கள் வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , மீண்டும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கவும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT