Published : 31 Oct 2024 05:50 AM
Last Updated : 31 Oct 2024 05:50 AM
சென்னை: தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை தவிர்க்கும் நோக்கில், ஆண்டு முழுவதும் தக்காளி உற்பத்தி செய்ய தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பசுமை குடில் அமைத்து உற்பத்தி செய்பவர்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது.
தொடர் மழை காரணமாக தக்காளி சேதமடைந்து வரத்து குறைந்துவிடுகிறது. இதனால், தக்காளி விலை கடுமையாக அதிகரிக்கிறது. பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், தக்காளியை அதிகமாக விளைவித்து விலை உயர்வை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் குறைந்தபட்சமாக திருப்பூர் மாவட்டத்திலும் தக்காளி விளைவிக்கப்படுகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் 32,300 ஹெக்டேரில் (சுமார் 80 ஆயிரம் ஏக்கர்) தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. பிற மாவட்டங்களில் குறைந்த அளவில் தக்காளி விளைவிக்கப்படுகிறது.
சென்னையின் தக்காளி தேவையை பூர்த்தி செய்ய, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி வரவழைக்கப்படுகிறது. தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் தக்காளி, தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. திருப்பூரில் விளையும் தக்காளி, கேரளாவுக்கும் அனுப்பப்படுகிறது. கோடை காலத்தில்தான் தக்காளி சாகுபடி நடைபெறுகிறது. ஒரு ஹெக்டேரில் சராசரியாக 30 டன் தக்காளி விளைகிறது. மழை காலங்களில் தக்காளி சாகுபடி செய்யப்படுவது இல்லை. திடீர் மழையால் தக்காளி சேதமடைந்து, வரத்து குறைவதால், தக்காளி விலை உயர்கிறது.
இந்த நிலையை போக்க, தக்காளி சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனால், இந்த ஆண்டு 500 ஹெக்டேரில் கூடுதலாக தக்காளி விளைந்துள்ளது. மேலும், விவசாயிகள் ஆண்டு முழுவதும் தக்காளி உற்பத்தி செய்ய பசுமை குடில்கள் அமைக்க அறிவுறுத்துகிறோம். இதற்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.467 மானியம் வழங்கப்படுகிறது. ஒருவர் 4 ஆயிரம் சதுர மீட்டர் வரை பசுமை குடில் அமைத்து தக்காளி விளைவிக்கலாம். பரப்பளவு அதிகரித்தால், மானியம் சற்று குறையும். அதிகபட்சமாக 4 ஆயிரம் சதுர மீட்டரில் தக்காளி சாகுபடி செய்தால் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.422 வீதம் என ரூ.16.88 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
இதன்மூலம், தக்காளி நடவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, தக்காளி விளைச்சலில் சேதம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதன்படி, தக்காளி செடியை உயரமாகவும் குச்சி நட்டும் சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குகிறோம். விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் பசுமை குடில்கள் அமைத்து தக்காளி உற்பத்தி செய்யும்போது, ஆண்டு முழுவதும் தக்காளி தட்டுப்பாடு இல்லாமலும், நியாயமான விலையிலும் கிடைக்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT