Published : 31 Oct 2024 06:33 AM
Last Updated : 31 Oct 2024 06:33 AM
சென்னை: மத்தாப்புக்களின் வெளிச்சம் போல் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளியாக அமைய தமிழக ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி : அன்னை லட்சுமி நம் இதயங்களை அளவற்ற அன்பு மற்றும் ஆழ்ந்த இரக்கத்தால் ஒளிரச் செய்து, அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், செழிப்பு, சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்த்து அருள் புரிவாராக.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி : தித்திக்கும் இனிய தீபாவளித் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: மத்தாப்புக்களின் வெளிச்சம் போல இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தீமையை வதம் செய்த தீபாவளித் திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை ஜொலிக்கவும், மக்களின் வாழ்வில் இல்லாமை என்பதே இல்லாததாகி, மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்க தீப ஒளி வகை செய்யட்டும்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் : தீபாவளி நன்னாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: இந்த தீபாவளி நாளில் நாம் அனைவரும் கேப்டனை நினைத்து வழிபடுவோம். தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஆணவம், அகங்காரம், இரக்கமின்மை, சினம் ஆகியவை அகன்று, தர்மம், ஈகை, மனித நேயம், செய்நன்றி அறிதல் ஆகியவை தழைத்தோங்கட்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் : கடந்த கால சிரமங்கள், துன்பங்கள், இயற்கைச் சீற்றங்கள் தொடராமல் இருக்க வரும்காலம் புதுப்பொலிவுடன் இருக்கும் வகையில் தீபாவளித் திருநாள் அமைய வேண்டும்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: இந்தியா முழுமையும் மகிழ்ந்து கொண்டாடும் ஒருநாள் தீபாவளி. இல்லமெங்கும் மகிழ்ச்சி உள்ள மெங்கும் மலர்ச்சி என இந்த ஒளிநாளில் அனைவர் மனதிலும் உற்சாகம் நிறைய வாழ்த்துகிறேன்.
ஐஜேகே தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து: தீபாவளி பண்டிகையில், பட்டாசு ஒலியிலும், மத்தாப்பின் ஒளியிலும் மக்களின் வாழ்வு மலர்ந்து, மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் : தீப ஒளி திருவிழா மனித நேயத்தை வளர்க்கும் மனவெளிச்சத்தை தரும் விழாவாக ஆசிப்போம். எல்லோரையும் ஒரு தாய் மக்களாக நேசிப்போம்.
இதேபோல், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி, வி.கே.சசிகலா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...