Published : 30 Jun 2018 05:55 PM
Last Updated : 30 Jun 2018 05:55 PM

இனிமே சபரிமலை செல்பவர்கள் வடவனூரும் வருவார்கள் - சுறுசுறு வேகத்தில் உயிர்பெறும் எம்.ஜி.ஆரின் வீடு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், தத்தமங்கலம் புதுநகரத்திலிருந்து தெற்கே செல்லும் சாலையில் 6 கிலோ மீட்டர் வடவனூர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தாய் வழி பூர்வீக வீடு. சில மாதங்கள் முன்பு வரை பாழடைந்து புதர் மண்டி ‘இப்பவே விழுந்துடுமோ!’ என்ற நிலையில்தான் இருந்தது.

ஆனால் இப்போது பழைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, அதற்கு அருகாமையில் இருந்த காலியிடத்தில் புது மண்டபங்களும், சிலை பீடங்களும், தங்கும் அறைகளுமாக புதுப்பொலிவுடன் உருவாகிக் கொண்டிருக்கிறது. சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஏற்பாட்டில் இது நடந்துகொண்டிருக்கிறது.

தங்களுக்கான அரசியல் இருப்பை தக்க வைத்திட சென்ற ஆண்டு தமிழகத்தில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, டிடிவி அணி என போட்டி போட்டுக்கொண்டு எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா நடத்திக் கொண்டிருந்த நேரம். இங்குள்ள எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு கவனிப்பில்லாமல் பாழடைந்து, சிதைந்து கொண்டிருந்ததை அப்போது தி இந்துவில் செய்தி வெளியானது.

அதைப் படித்த சைதை துரைசாமி இங்கே வந்து நேரடியாக ஆய்வு செய்து வீடும், சுற்றுப்பகுதிகளும் கிடந்த கோலம் கண்டு, இதை தனது சொந்த செலவில் புனரமைத்து எம்.ஜி.ஆரின் நினைவு இல்லம் ஆக்குவதாக சொல்லி, இதற்கென ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்தார். இப்போது அந்த நிதியும் போதாமல் மேலும் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி வேலைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

அடுத்த மாதத்தில் இதன் திறப்பு விழாவும் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வர வடவனூருக்கே நேரடியாக சென்று பார்த்தேன். ஓட்டு வீட்டின் குண்டும், குழியுமாய் கிடக்கும் வீட்டின் முகப்புத் திண்ணை.

இப்போது பளீரென்று புதுக்காரை போடப்பட்டு காட்சியளித்தது. ‘எப்போது வேண்டுமானாலும் விழுவோம்’ என மிரட்டும் மூன்று பக்கச்சுவர்களும் முழுமையாக பூசப்பட்டு, விலகிக்கிடந்த கூரை ஓடுகள் ஒழுங்கமைக்கப்பட்டு சீராக காட்சியளித்தது. வீட்டினுள்ளே தரைத்தளம், அறைகள் எல்லாமே துப்புரவாக. வீட்டின் பின்புறம் இருந்த பாழும் கிணறு சுத்தம் செய்யப்பட்டு அதில் உள்ள ‘சத்தியவிலாஸம்’ சிமெண்டில் பொறிக்கப்பட்ட மலையாள வார்த்தைகள் பளிச்சிட்டது.

அதை இருக்குமிடம் தெரியாமல் ஆக்கிய புதர் செடிகள் அறவே இல்லை. கிணற்றுக்கு மோட்டார் வைக்கப்பட்டு, மேல்நிலை தண்ணீர் தொட்டி நிலை நிறுத்தப்பட்டு நீர் எடுக்கப்பட்டிருந்தது. இவையெல்லாம் ஏற்கெனவே நான் பார்த்த இடம்தானா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இது மட்டுமல்ல முன்புறத்தில் சிதறிக்கிடந்த மண்ணால் ஆன சுற்றுச்சுவர் சிமெண்ட் காரை பூசப்பட்டு, அதில் ஒரு பீடம். அதில் எம்.ஜி.ஆர். சிலை சீக்கிரமே நிறுவ இருக்கிறார்களாம். எம்.ஜி.ஆரின் தாய் வசித்த வீடு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டிருக்க, அதன் இடது புறம் புதர்காடாக காட்சியளித்த, சிதிலமடைந்து கிடந்த கழிப்பிடம் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு அங்கே ஒரு பெரிய மண்டபம் எழும்பியிருக்கிறது. அதனூடே சில தங்கும் அறைகள். அதை ஒட்டியே இன்னொரு கட்டிடம். ஏற்கெனவே இங்கே இயங்கி வந்த அங்கன்வாடி மையம் இனிமேல் இதற்குள் செயல்பட மாற்று ஏற்பாடு செய்துள்ளார்கள்.

திறப்பு விழா நாள் வரை அது தற்போது அருகில் வேறொரு இடத்தில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதைத்தாண்டி நவீன கழிப்பிடங்கள், குளியலறைகள் கட்டப்பட்டுள்ளன.

கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வருவதைப் பற்றி மகிழ்ச்சி தெரிவித்த அங்கன்வாடி பள்ளி ஊழியர்களான சாந்தகுமாரி, பிரசன்னா, “ஜெயலலிதா பிறந்தநாள், எம்.ஜி.ஆர். பிறந்தநாள்ன்னா தமிழ்நாட்டுலயிருந்து கட்சிக்காரங்க வருவாங்க. எல்லோருக்கும் மிட்டாய் கொடுப்பாங்க. அன்னதானம் கூட செய்வாங்க. ஆனா யாருமே கட்டடத்தை புதுசாக்க எதுவும் செய்யல. ஜெயலலிதா இறந்த பின்னாடி சுத்தமா இந்த இடத்தை மறந்துட்டாங்க. நீங்கள் வந்து செய்தி போட்ட பின்னாடிதான் மதுரைக்காரங்க கொஞ்ச பேர் வந்து பார்த்தாங்க.

அப்புறம் சைதை துரைசாமி சொன்னார்ன்னு மெட்ராஸ்லயிருந்து சில பேர் வந்தாங்க. அப்புறமாத்தான் அவரே நேரடியா வந்தார். அவர் இந்த இடம் சம்பந்தப்பட்டவங்ககிட்ட பேசி, பஞ்சாயத்துலயும் பேசி இந்த வேலையை செய்யறதா சொன்னார். அது இவ்வளவு சீக்கிரம் இந்தளவுக்கு நடக்கும்ன்னு நாங்க நினைச்சுக்கூட பார்க்கலை!” என்றவர்கள், தற்போது எம்.ஜி.ஆர் இல்லம் இப்படி செய்யப்பட்டிருப்பதால் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சேர்ப்பு அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர் இல்லம் புனரமைப்பு சம்பந்தமாக சைதை துரைசாமியிடம் தொலைபேசி வழி பேசினேன். “இப்போது கடைசிக் கட்ட வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை தமிழகத்திலிருந்து சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் யாவரும் இந்த எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் வந்து செல்ல வேண்டும். அவர்கள் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை உணர்வுப்பூர்வமாக அறிய வேண்டும்.

அதற்கேற்ற வகையிலேயே இதை அமைக்கிறோம். இதை பராமரிக்க நிரந்தரமாக ஆட்களை நியமிக்க உள்ளோம். இன்னமும் ஒரு மாத காலத்தில் வேலை முடியும். தி இந்து செய்தியினாலேயே இது நடந்தேறிக் கொண்டிருக்கிறது!” என தெரிவித்தார்.

சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் இல்லத்தை புதுப்பிக்க முனைந்த பிறகு வடவனூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளன. வடவனூரில் பஞ்சாயத்து சார்பில் கட்டப்பட்ட சமூக நலக்கூடம் ஒன்றுள்ளது. அதை சித்தூர் எம்எல்ஏ கே.அச்சுதன் தன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைத்து 2010 ஆம் ஆண்டில் திறந்து வைத்திருக்கிறார்.

அந்த சமயம் தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் இங்கே பிறந்தநாள் கொண்டாடியதன் விளைவு. உள்ளூர் பிரமுகர்கள் இந்த மண்டபத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரையே சூட்டியிருக்கிறார்கள். இம்மண்டபம் ஆயிரம் பேர் பங்கேற்கக்கூடிய விழாவை நடத்தும் அளவு விஸ்தீரணமாக இருந்தாலும் போதிய பார்க்கிங் வசதி இல்லை. எம்.ஜி.ஆர். இல்லம் பார்வையிட வந்த சைதை துரைசாமியிடம், அந்த வசதியை செய்து தரக் கேட்டுக் கொண்டனராம், அத்துடன் மண்டபத்திற்கு முதல் தளமும் அமைத்து தர வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். எம்ஜிஆர் இல்ல புனரைமைப்பு பணிகள் முடிந்ததும் அதுவும் நடக்கும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு!” என்றார் மண்டப வாட்ச்மேன் சாமி.

 

எம்.ஜி.ஆர் இல்லம் இருக்கும் கவுண்டந்தரா பகுதியிலேயே த்தில் ‘சரோஜினி அம்மாள் நினைவு பள்ளி’ என்ற பெயரில் ஆரம்பப்பள்ளி ஒன்று இருந்தது. அங்கே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது. அத்தோடு பாழடைந்த அதன் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்கும் எம்.ஜி.ஆர் பெயரையும் சேர்த்தே வைக்க உள்ளதாக தெரிவிக்கிறார்கள் மக்கள். இதேபோல் எம்.ஜி.ஆர் மியூசியம் ஒன்றை உள்ளூர் ஆட்களே சேர்ந்து இங்குள்ள மில் ஒன்றில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அங்கும் எம்.ஜி.ஆர் வரலாறு குறித்த புகைப்பட ஆல்பங்கள், நினைவுப் பொருட்கள் வைக்க திட்டமிட்டு உள்ளனராம். இதற்கான ஏற்பாடுகளை உள்ளூர் பிரமுகர்கள் தன்னிச்சையாகவே செய்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x