Last Updated : 31 Oct, 2024 01:37 AM

 

Published : 31 Oct 2024 01:37 AM
Last Updated : 31 Oct 2024 01:37 AM

தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை: பசும்பொன்னில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் திரண்டனர்

பசும்பொன் நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் உள்ளிட்டோர்.படம்: எல்.பாலச்சந்தர்

மதுரை: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜையையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் திரண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் விடுதலைக்காக தன்னையே ஒப்படைத்த பசும்பொன் தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன். இந்த நேரத்தில், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தேவரைப் பெருமைப்படுத்திச் சொன்னதை நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

“அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் போன்று, கம்பீரமாகக் காட்சி அளித்தார் தேவர் திருமகன்" என்று அண்ணா அவரைப் பாராட்டியிருக்கிறார். “வீரராகப் பிறந்தார்; வீரராக வாழ்ந்தார்; வீரராக மறைந்தார்; மறைவுக்குப் பிறகும் வீரராகப் போற்றப்படுகிறார்” என்று கருணாநிதி புகழ்ந்து பேசியிருக்கிறார். அத்தகைய தியாகியை திமுக அரசு போற்றி வருகிறது.

தமிழக அரசு கோரிப்பாளையத்தில் வெண்கலச் சிலை, பசும்பொன்னில் நினைவில்லம், மேலநீலிதநல்லூர், கமுதி, உசிலம்பட்டியில் தேவர் பெயரில் 3 அரசுக் கல்லூரிகள், மதுரை ஆண்டாள்புரத்தில் "முத்துராமலிங்கத் தேவர் பாலம்" அமைத்து அவரைப் போற்றியுள்ளது.

2007-ல் காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் கல்வி அறக்கட்டளை, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்கி, தேவரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினோம். மேலும், அவர் வாழ்ந்த இல்லத்தைப் புதுப்பித்து, வளைவும், அணையா விளக்கும் அமைத்தோம். இதுதவிர, நூலகக் கட்டிடம், பால்குடங்கள் வைப்பதற்கு மண்டபம், முளைப்பாரி மண்டபம் என்று தேவருக்கு புகழ் சேர்க்கும் திட்டங்களை நிறைவேற்றினோம்.

தேவர் நினைவிடத்தில் கடந்த அக். 28-ம் தேதி ரூ.1.55 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட அரங்கம் திறக்கப்பட்டது. இவ்வாறு தேவரைப் போற்றும் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.

தமிழக மீனவர் பிரச்சினை குறித்து தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். நான் டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் பிரதமரிடம் பேசியிருக்கிறேன். வெளியுறவுத் துறை அமைச்சரிடத்திலும் தெரிவித்தோம். அவர்களும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்ததால், மீனவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண மத்திய அரசு முன்வர வேண்டும்.

முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்போதுகூட 12 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகளை துரிதப்படுத்தினோம். தற்போது 40 சதவீதம் நில எடுப்புப் பணி முடிந்துள்ளது. அந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x