Published : 31 Oct 2024 12:37 AM
Last Updated : 31 Oct 2024 12:37 AM

போக்குவரத்து கழகங்களில் காலியாகவுள்ள 2,877 ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் பின்னடைவு காலிப்பணியிடம் உட்பட 2,340 டிசிசி (ஓட்டுநர், நடத்துநர் பணிகளை ஒரு சேர மேற்கொள்வோர்) பணியிடங்கள், 537 தொழில்நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 2,877 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் இருப்பதால் விடியல் பயணத் திட்டம் பாதிக்கப்படுவதோடு, வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதில் 25 சதவீத காலிப்பணியிடத்தையாவது நிரப்பினால் மட்டுமே இடையூறில்லாமல் போக்குவரத்து சேவை அளிக்க முடியும் என போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலக சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியிருந்தார். இதன்தொடர்ச்சியாக போக்குவரத்துத் துறை தலைவர் சிறப்பு அதிகாரி கேட்டுக் கொண்டபடி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் சேர்த்து 2,340 டிசிசி (ஓட்டுநர், நடத்துநர் பணிகளை ஒரு சேர மேற்கொள்வோர்) காலிப்பணியிடங்களை நிரப்ப மேலாண் இயக்குநர்களுக்கு அரசு அனுமதி வழங்குகிறது.

இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 307 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், 537 தொழில்நுட்ப பணியாளர் காலிப்பணியிட விவரத்தையும் டிஎன்பிஎஸ்சி-க்கு வழங்கி நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மேலாண் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 462 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x