Published : 30 Oct 2024 03:07 PM
Last Updated : 30 Oct 2024 03:07 PM
மதுரை: மதுரையில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.30) ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.30) நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மதுரையில் வெள்ளபாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது மதுரையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதி மீண்டும் அவ்வாறு நேராதிருக்க உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணியாக 290 மீட்டர் நீளத்துக்கு சிமெண்ட் கால்வாய் அமைக்கவேண்டியதன் தேவை குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் செல்லூர் கால்வாயிலிருந்து நீர் வெளியேறுவதற்கு சிமெண்ட் கால்வாய் 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட உத்தரவிட்டார். இதன்மூலம் இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT