Published : 30 Oct 2024 03:20 PM
Last Updated : 30 Oct 2024 03:20 PM
புதுச்சேரி: ஆளுநர் ஒப்புதல் அளித்தும் மத்திய உள்துறைக்கு அனுப்பப்படாமல் தலைமைச் செயலகத்தில் புதிய சட்டப்பேரவை கோப்பு இருப்பதால் பேரவைத் தலைவர் அதிருப்தி அடைந்து, முதல்வரைச் சந்தித்து இது தொடர்பாக முறையிட்டுள்ளார்.
புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் சட்டப்பேரவை இயங்கி வருகிறது. கடற்கரைச் சாலையில் தலைமைச்செயலகம் இயங்கி வருகிறது. தலைமைச்செயலகத்துடன் கூடிய புதிய சட்டப்பேரவை கட்டிடத்தைக் கட்ட அரசு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து பேரவைத்தலைவர் செல்வம், மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்ட அனுமதி கோரினார். அவர்களும் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்ப அறிவுறுத்தினர்.
இதையடுத்து பொதுப்பணித்துறை ரூ.700 கோடிக்கு வரைபடத்துடன் கூடிய திட்ட வரைவு அறிக்கையை தயாரித்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது. அப்போதைய துணைநிலை ஆளுநர் தமிழிசை, அதில் சில விளக்கங்களை கேட்டு திருப்பி அனுப்பினார். தலைமைச் செயலகத்துடன் கூடிய சட்டப்பேரவை கட்டிடத்தைக் கட்டுவதால் கூடுதல் செலவினமாகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.
இருப்பினும் புதிய சட்டப்பேரவை கோப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அப்போதைய துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கும் பேரவைத்தலைவர் செல்வத்துக்கும் இடையே மோதல் உருவானது. இந்த நிலையில், புதுவை துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார். அவர் நிலுவையில் இருந்த புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டுவதற்கான கோப்பு, ரேஷனில் இலவச அரிசி வழங்குவது தொடர்பான கோப்புகளுக்கு அனுமதி அளித்தார்.
தற்போது இலவச அரிசி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் புதிய சட்டப்பேரவை கட்டுமானம் தொடர்பான கோப்பு இன்னும் உள்துறைக்கு அனுப்பப்படாமல் உள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் ரூ.576 கோடியில் 15 ஏக்கரில் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டப்படும் என பேரவைத்தலைவர் செல்வம் அறிவித்திருந்தார்.
இதற்காக ஆளுநர் அனுமதி தந்த கோப்பு தலைமைச் செயலரிடம் இருந்து. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் பேரவைத்தலைவர் செல்வம் அதிருப்தி அடைந்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டுள்ளார். விரைவில் தலைமைச்செயலரை அழைத்து விளக்கம் கேட்கவும் திட்டமிட்டுள்ளார்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT