Published : 30 Oct 2024 09:08 AM
Last Updated : 30 Oct 2024 09:08 AM
சென்னை: “போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீபாவளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது” என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வரின் சீரிய தலைமையில் தமிழ்நாட்டில் மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறார்கள். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை சீரழித்து சென்றுள்ள நிலையில், இந்த அரசானது பொதுமக்களின் போக்குவரத்துத் தேவை மற்றும் சேவையைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களை மறுசீரமைப்பு செய்து, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் இருகின்ற நிலையிலும் முதல்வர், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 741, C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு, 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகையாக ரூ.182.32 கோடி வழங்குவதற்கு உத்தரவிட்டு. அரசு ஆணை எண்: 310, நிதித் துறை நாள்: 14/10/2024, வாயிலாக, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அரசு ஆணை (நிலை) எண்: 124, போக்குவரத்துத் துறை நாள்: 25/10/2024 ன்படி உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ரூ.182.32 கோடி போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்தும், அறியாததுபோல ராமதாஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது. நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் தமிழக போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும், வேறு அரசியல் செய்ய வழி இல்லாமலும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குறியதாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT