Published : 30 Oct 2024 05:57 AM
Last Updated : 30 Oct 2024 05:57 AM

சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 16 தொகுதிகளில் 39,25,144 வாக்காளர்கள் - ஆண்களைவிட பெண்கள் அதிகம்

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 2025-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியலை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி துணை ஆணையாளருமான (வருவாய் மற்றும் நிதி) எம்.பிருதிவிராஜ் நேற்று வெளியிட்டார். படம்: ம.பிரபு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 39 லட்சத்து 25 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர் என்று வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 68,704 பேர் அதிகமாக இருக்கின்றனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 2025-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி துணை ஆணையாளருமான (வருவாய் மற்றும் நிதி) எம்.பிருதிவிராஜ் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்:

சென்னை மாவட்டத்தில் 3,718 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளின் 19,41,271 ஆண் வாக்காளர்கள், 20,09,975 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,252 இதர வாக்காளர்கள் என மொத்தம் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேலும் 25,628 ஆண்கள், 27,669 பெண்கள் மற்றும் 62 இதரர் என மொத்தம் 53,359 வாக்காளர்களின் பெயர்கள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 12,818 ஆண்கள், 13,178 பெண்கள் மற்றும் 9 இதரர் என மொத்தம் 26,005 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னையில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் எண்ணிக்கையில் வேளச்சேரி தொகுதியில் அதிகபட்சமாக 3 லட்சத்து 12 ஆயிரத்து 912 பேர் உள்ளனர். துறைமுகம் தொகுதியில் குறைந்தபட்சமாக 1 லட்சத்து 76 ஆயிரத்து 197 பேர் இருக்கின்றனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சியின் 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகிய மண்டல அலுவலகங்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புவோர் அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் நவ.28-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x