Published : 30 Oct 2024 05:58 AM
Last Updated : 30 Oct 2024 05:58 AM
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் முதல்முறையாக அதிகாரிகள் அல்லாத அலுவலர்கள், உதவியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 300 ஊழியர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்படவுள்ளது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிர்வாகம், பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 600-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழகத்தில் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது.
ஆனால், தமிழக அரசின் பங்களிப்போடு செயல்படும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் போனஸ் வழங்குவதில்லை. எனவே, மெட்ரோ ரயில் நிறுவனத்திலும், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என ஊழியர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் முதல் முறையாக போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாரிகள் அல்லாத அலுவலர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் 300 ஊழியர்களுக்கு தலா ரூ.15,000 வழங்கப்படவுள்ளது.
2023-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி முதல் நடப்பாண்டில் மார்ச் மாதம் வரையிலான காலத்தில், மெட்ரோவில் 6 மாதங்களுக்கு மேல் வேலை செய்தவர்களுக்கு இந்த போனஸ் தொகை கிடைக்கும். மெட்ரோ நிர்வாகத்தின் போனஸ் அறிவிப்புக்கு, ஊழியர்கள் வரவேற்றும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT