Published : 04 Jun 2018 07:19 AM
Last Updated : 04 Jun 2018 07:19 AM

‘சுண்டைக்காய் கால்பணம்; சுமைகூலி முக்கால் பணம்’: ரூ.50-க்கு வரைவோலை எடுக்க ரூ.94 கட்டணம்- வங்கிகளின் விதிமுறையால் பொதுமக்கள் அதிருப்தி

வங்கிகளில் ஐம்பது ரூபாய்க்கு வரைவோலை எடுக்க, வரைவோலைக் கட்டணமாக ரூ.94 வசூலிப்பது பொதுமக்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.

மத்திய அரசின் இந்தி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் அஞ்சல்வழிக் கல்வித் துறை சார்பில், ‘அஞ்சல் வழியில் இந்தி பயிலுங் கள்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தாய்மொழி இந்தி அல்லாத, 10 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு இந்தி சான்றிதழ் படிப்பு, அடிப்படை இந்தி தெரிந்தவர் களுக்கு பட்டயப் படிப்பு ஆகியவற்றில் சேர்வதற்கான அறிவிப்பை இந்தி இயக்குநரகம் கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, ஜூலை 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இதில் தமிழ், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தி கற்பிக்கப் படும். இப்படிப்புகளுக்கான கட்டணம் ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை அஞ்சல் ஆணை, வங்கி வரைவோலையாக எடுத்து, விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.

சென்னையில் இருந்தும் பலர் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இதற்காக வங்கி வரைவோலை எடுக்க சென்னை பூங்கா நகர் கனரா வங்கி கிளைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு அங்கு வங்கிக் கணக்கு இல்லாததால், வரைவோலை எடுப்பதற்கான கட்டணமாக ரூ.94 வசூலிக்கப்பட்டுள்ளது.

வாராக் கடன் அதிகரிப்பு

இதுபற்றி விண்ணப்பதாரர்கள் கூறும்போது, ‘‘படிப்பு கட்டணமே ரூ.50 தான். ஆனால் அதை வரைவோலையாக எடுக்க ரூ.94 வசூலிப்பது அதிர்ச்சியாக உள்ளது. சுண்டைக்காய் கால்பணம்; சுமை கூலி முக்கால் பணம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது’’ என்றனர்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:

‘‘வங்கிகள் வாராக் கடனை முறையாக வசூலிக்காததால்தான், இவ்வாறு பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2012-ல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக இருந்த வாராக் கடன், 2017-18 நிதியாண்டில் ரூ.6 லட்சத்து 86 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடராமல், வாராக் கடன் தள்ளுபடி செய்யப்படு கிறது. அந்த தொகை வங்கிகள் மீதும், பொதுமக்கள் மீதும் திணிக்கப்படுகிறது’’ என்றார்.

அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து கனரா வங்கியின் சென்னை வட்டார அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, “சம்பந்தப்பட்ட வங்கியில் கணக்கு இல்லாதவர்களுக்கு, வங்கி வரைவோலை கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான அதிகாரம், வங்கி மேலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ரூ.1000 வரை வரைவோலை எடுக்க ரூ.47 வசூலிக்க வேண்டும். சிறப்பு அதிகாரத்தின் கீழ் இரட்டிப்பாக ரூ.94 வசூலித்திருக்கலாம். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வும் அவ்வாறு செய்திருக்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x