Published : 30 Oct 2024 02:31 AM
Last Updated : 30 Oct 2024 02:31 AM

இன்று உலக சிக்கன நாள் கொண்டாட்டம் - அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

சென்னை: இன்று உலக சிக்கன நாளையொட்டி மக்கள் அனைவரும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக சிக்கன நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி (இன்று) உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாக செலவு செய்து, வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பாக்கி, எதிர்காலத்தில் பெரும் பயனடைந்து, வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளது. இது சேமிப்பவர்களின் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், எதிர்பாரா செலவுகளை எதிர்கொள்வதற்கும் பயன்படுகிறது. தனிமனிதனின் சேமிப்பு அக்குடும்பத்துக்கு பயன்படுவதோடு மட்டும் அல்லாமல், அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ஏதுவாகிறது.

இதன்மூலம் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிப் பணிகளில் சிறுசேமிப்புத் திட்டங்களின் பங்களிப்பு சிறப்பான அளவில் அமைகிறது. சிறுகக் கட்டி பெருக வாழ் என்னும் பொன் மொழிக்கேற்ப, பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், விவசாயிகள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், முறைசாரா தொழிலில் ஈடுபடுவோர், சுயதொழில் புரிவோர், மகளிர்ஆகிய அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் சேர்ந்து சேமிப்புக் கணக்கினை தொடங்கிட இந்த உலக சிக்கன நாளில் கேட்டுக்கொள்கிறேன். “செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம்” என்னும் உறுதி கொண்டு சிறப்பாக வாழ்ந்திடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சேமிப்பும், சிக்கனமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றது. தேனீக்கள் பூவிலிருந்து தேனை எடுத்து சேமிக்கின்றன. எறும்புகள் ஊர்ந்து சென்று மழை காலத்துக்காக தன் உணவை சேமிக்கின்றன. அதுபோல மனிதர்களும் சேமித்து சிக்கனமாக இருந்து வாழ்வில் செழிப்படைய வேண்டும். வாழ்க்கை பயணத்தை சிறப்பாகவும், வளமாகவும், பாதுகாப்பாகவும், எதிர்பாராதவிதமாக ஏற்படும் நிதி நெருக்கடிகளை சமாளிக்கவும் இந்த சிக்கனமும் சேமிப்பும் உதவிடும்.

வருமானத்துக்கு உட்பட்டு செலவு செய்து, சிக்கனமாக வாழ்ந்து, நமக்கும் நம் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதையே உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது. பொருள் ஈட்டுவது மட்டும் மனிதனின் முக்கியமான கடமையல்ல. ஈட்டிய பொருளை திறம்பட பாதுகாப்பதுதான் மனிதனின் வாழ்க்கை நெறியாகும். வறுமை, பிணி மற்றும் சமூகக் கேடுகளை அழிக்கும் மாமருந்து சிறுசேமிப்பு ஆகும். எனவே, வீட்டுக்கொரு சேமிப்புக் கணக்கை அஞ்சலகங்களில் மக்கள் தொடங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x