Published : 29 Oct 2024 04:18 PM
Last Updated : 29 Oct 2024 04:18 PM
சென்னை: டான்டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு ரூ.5.72 கோடி செலவில் இந்த, 20% போனஸ் வழங்கப்படும். இதனால் 3,939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக்கொண்டு, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகமானது (TANTEA) 1976-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடிக்கிடையிலும், 1093 ஓய்வுபெற்ற தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்கும்பொருட்டு ரூ.29.38 கோடியினை வழங்கியது, ஓய்வு பெற்ற தேயிலை தோட்ட கழக தொழிலாளர்கள் வசிக்க ஏதுவாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கான பயனாளிகளின் பங்களிப்பிற்கு என ரூ.13.46 கோடி வழங்கியது, தேயிலை தோட்டக் கழக தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ.438- ஆக உயர்த்தி ஆணையிட்டது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக ஊழியர் நலன் காக்க தமிழக முதல்வர் எடுத்து வருகிறார்.
இந்த ஆண்டு போனஸ் வழங்க அரசு வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் படி நட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக பணியாளர்கள் 10% போனஸ் மட்டுமே பெற தகுதியானவர்கள். சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு ரப்பர் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுகிறது.
வனத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன பணியாளர்களுக்கும் ஒரே அளவில் 20% போனஸ் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கும் ரூ.5.72 கோடி செலவில் 20% போனஸ் வழங்கப்படும். இதனால் 3939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT