Last Updated : 29 Oct, 2024 04:43 PM

 

Published : 29 Oct 2024 04:43 PM
Last Updated : 29 Oct 2024 04:43 PM

“தீபாவளிக்கு இம்முறை அதிகம் பேர் பேருந்துப் பயணத்துக்கு முன்பதிவு” - அமைச்சர் சிவசங்கர்

அரியலூர்: தீபாவளி பயணங்களை பொறுத்தவரை முந்தைய தீபாவளியைக் காட்டிலும் இம்முறை அதிகம் பேர் பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி கிராமத்திலிருந்து கடலூர் மண்டலத்தின் சார்பில் சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்தை இயக்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி முன்னிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கொடியசைத்து புதிய வழித்தடப் பேருந்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ''தீபாவளி பயணங்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு அரசுப் பேருந்துகளில் பயணிக்க 1,10,000 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இந்த ஆண்டில் நேற்று வரையில் 1,42,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அரசுப் போக்குவரத்து கழகங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவில்லாமல் பயணம் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், அதற்கேற்ப பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் சுமார் 1,10,750 பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இன்றும், நாளையும் சேர்த்து சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயுதபூஜை விடுமுறை நாட்களில் ஏற்கெனவே சோதனை முறையில் தனியார் ஒப்பந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டது. தேவைக்கேற்ப தனியார் ஒப்பந்த பேருந்துகள் அரசு கட்டணத்திலேயே அரசு வழங்குகின்ற பயணசீட்டு கொடுக்கப்பட்டு இயக்கப்படும். அதில் அரசு நடத்துநர் பயணிப்பார். அரசு ஒப்பந்த வாகனம் என்ற பெயரோடு அவை இயக்கப்படும்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது முன்பதிவு செய்யும் பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் மேலும் உயர்த்தப்படும். தனியார் பேருந்துகள் ரெட் பஸ் செயலி மூலமாக அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வரப்பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளிடமிருந்து புகார் வரப்பெற்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் அது பயணிகளுக்கு மீண்டும் வழங்கப்படுவதுடன் தொடர்புடைய பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். செயலிகள் மூலம் விற்பனை செய்யப்படும் பயணச் சீட்டுகள் தொடர்பாக புகார் வரப்பெற்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x