Published : 29 Oct 2024 04:01 PM
Last Updated : 29 Oct 2024 04:01 PM
திருச்சி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை தமிழக அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை வெடித்தது முதலே ஆளுநர் விழாக்களை தமிழக அமைச்சர்கள் புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை தூர்தர்ஷன் நிலையத்தில் அக்.18-ம் தேதி நடைபெற்ற இந்தி மாத நிறை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியவர்கள் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வரியை விட்டுவிட்டு பாடிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்துக்குப் பிறகு ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர்.
கடந்த அக்.19-ம் தேதி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமாகிய மு.பெ.சாமிநாதன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், இந்நிகழ்ச்சிக்காக வந்தவர் தஞ்சை செல்வதை தவிர்த்துவிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நீதிக்கட்சி தலைவர் சர்.பி.டி.பன்னீர்செல்வம், பழம்பெரும் திரைப்பட நடிகர் எம்.கே.தியாகராஜ பாகதவர் ஆகியோர் மணிமண்டபங்களுக்கு சென்று ஆய்வு செய்து, அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்.
அதைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி நெல்லையில் நடைபெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவையும் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். அதேபோல் நேற்று (அக்.28) ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும், அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று (அக்.29) நடைபெற்ற 39-வது பட்டமளிப்பு விழாவையும் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார். இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உயர் கல்வித் துறை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத போதும் துணைவேந்தர் செல்வம் தனது வரவேற்புரையில் உயர் கல்வித் துறை அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு வரவேற்றார். ஆளுநர் ரவியின் நிகழ்ச்சிகளை தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவது தமிழகத்தில் பேசுபொருளாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT