Published : 29 Oct 2024 05:37 AM
Last Updated : 29 Oct 2024 05:37 AM

தனியார் பேருந்துகளை வாடகைக்கு இயக்குவது பொது போக்குவரத்தை தனியார் மயமாக்கும்: கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்களின் நலன் கருதி தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தை தனியாருக்கு விடும் நிலையை ஏற்படுத்திவிடும் என மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. ஆனால், இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்துக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முன்வந்துள்ள நடவடிக்கை ஏற்கத்தக்கல்ல.

தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு போக்குவரத்துக் கழகங்களின் சேவை முக்கிய பங்களிப்பு செய்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடும் முக்கிய காரணமாகும். அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு திட்டமிடுவதற்கு பதிலாக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, அரசுக்கோ, பொதுமக்களின் நலனுக்கோ வலுசேர்க்காது.

இது எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தை தனியாருக்கு விடும் நிலையை ஏற்படுத்திவிடும். எனவே, தமிழக அரசு போக்குவரத்து துறையில், நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியார் துறையை அனுமதிக்கக் கூடாது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் சிறப்பாக இயங்கி வரும் அரசு மனநல மருத்துவமனையை தனியாரின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் வகையில், அண்மையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். இது நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்துள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமான புற நோயாளிகளுக்கு நாள்தோறும் சிகிச்சை அளிக்கும் இம்மருத்துவமனை, சுமார் 800-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகிறது.

சிறப்பாக செயல்பட்டு வரும் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை மேலும் மேம்படுத்தி பராமரிப்பதற்கு மாறாக, அதை கம்பெனி சட்டத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் எனவும், அதற்கான முன்மொழிவை தயாரிக்க ஒரு சிறப்பு அலுவலரை நியமித்தும் தமிழக சுகாதார செயலர் ஒரு கடிதத்தை தன்னிச்சையாக வெளியிட்டுள்ளார்.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையை தனியார்மயமாக்கும் முயற்சி மிகவும் ஆபத்தானதாகும். எனவே, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியார் வசம் ஒப்படைக்க மேற்கொண்டுள்ள முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x