Published : 20 Jun 2018 05:04 PM
Last Updated : 20 Jun 2018 05:04 PM
புதுச்சேரியில் பிரதமர் மோடியின் காணொலி உரையாடல் நிகழ்வில் குழப்பமே நிலவியது. விவசாயிகள் மிகக் குறைவான அளவே பங்கேற்ற சூழலில் பேச அங்கு ஏற்பாடு செய்யாமல் தனியாக தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்ததை அறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் அரங்கிலிருந்து வெளியேறினர்.
பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் பேசும் காணொலி உரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. புதுச்சேரியில் காமராஜர் வேளாண் அறிவியல் கழகத்தில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி விவசாயிகளிடம் கலந்துரையாடல் செய்ய உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு விவசாயிகள் அழைக்கப்பட்டிருந்தனர். காலை 9 மணிக்கு விவசாயிகள் வரத் தொடங்கினர்.
காமராஜர் வேளாண் அறிவியல் அரங்கு அப்போதுதான் திறக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. அதையடுத்து மிகக் குறைவான விவசாயிகளே வந்திருந்தனர். பிரதமர் மோடி உரை காணொலிக் காட்சி மூலம் ஒளிபரப்பானது. பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. இதையடுத்து வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள், பணியாளர்களை அமர வைத்தனர். அப்படியிருந்தும் நிரம்பவில்லை.
இந்நிலையில் விவசாயிகள் தங்களுக்குப் பேச வாய்ப்பு கிடைக்குமா என்று விரிவாக்கவியல் நிபுணர் குமாரிடம் கேட்டனர். அதற்கு அவர், "விவசாயிகள் ஐவரை தலைமைச் செயலகத்திலுள்ள நிக் (NIC) அலுவலகத்துக்கு நிலைய முதல்வர் அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள்தான் பிரதமருடன் பேச வாய்ப்புள்ளது. இங்குள்ளோர் பிரதமர் பேசுவதைப் பார்க்கலாம்" என்றார். இதையடுத்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரங்கிலிருந்து வெளியேறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT