Published : 19 Jun 2018 09:57 PM
Last Updated : 19 Jun 2018 09:57 PM
சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்துவரும் நாட்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து, மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்ததையடுத்து, சென்னையில் கடந்த ஒரு வாரமாக வெயில் கடுமையாக வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில், பருவமழை சற்று குறையத் தொடங்கி இருப்பதால், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் முகநூலில் எழுதி வரும் பிரதீப்ஜான் தெரிவித்து இருப்பதாவது:
ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்று இரவுகூட மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. கடற்கரை காற்று மாலைநேரத்தில் நிலப்பரப்பை நோக்கி வீசும் போது, மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை இன்று மாலை பெய்யாவிட்டால் இரவோ அல்லது நாளைப் பெய்யக்கூடும். வெப்பச்சலன மழை சென்னையில் இன்றுமுதல் தொடங்கும். ஆதலால், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளில் இடியுடன் மழை அடுத்து வரும் நாட்களில் பெய்யக்கூடும்.
குறிப்பாக சென்னையில் வெப்பச்சலனத்தால் மழை பெய்யும் சூழல் சாதகமாக இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழை பெய்யும்பட்சத்தில் மற்ற மாவட்டங்களில் மழை இருக்காது. மழை பெய்தாலும் சென்னை நகர் முழுவதும் இருக்காது. மழை பெய்தாலும் அது நம்மைப் பொருத்தவரை அது போனஸ்தான். ஜுன் மாதம் சென்னைக்கு பெய்ய வேண்டிய மழையைக் காட்டிலும் அதிகமாகப் பெய்துவிட்டது. இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரப்போவதில்லை, நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு நீர்வரத்தும் அதிகரிக்காது.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT