Last Updated : 10 Jun, 2018 08:42 AM

 

Published : 10 Jun 2018 08:42 AM
Last Updated : 10 Jun 2018 08:42 AM

போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து பல கோடி திருடிய சர்வதேச நெட்வொர்க்: இதுவரை டாக்டர் உட்பட 10 பேர் கைது; அரசியல் கட்சியினர் தொடர்பால் மூடிமறைக்க முயற்சி என புகார்

புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி நடைபெற்ற பல கோடி ரூபாய் மோசடி பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக பல வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவதாக போலீஸாருக்கு 70-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன. புதுச்சேரி போலீஸார் விசாரணையை தொடங்கியபோது நவீன திருட்டின் மறுபக்கம் தெரிய தொடங்கியது. விசாரணை சிபிசிஐடி போலீஸார் வசம் சென்றது.

முதலில் வங்கிக் கணக்கில் இருந்து போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் திருடப்பட்டதாக தெரிந்தது. இதன் பின்னணியில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருப்போர் தொடங்கி கடைக்காரர்கள், அரசியல் பின்னணி உடையோர் என நெட்வொர்க்காக இணைந்து பணியாற்றியது தெரிந்தது.

நவீன களவின் நீண்ட கரம்

இந்த நெட்வொர்க் வெளிநாடு வரை நீண்டிருந்தது. பணத்தை பறிகொடுத்தோர் பட்டியலும் உள்ளூர் தொடங்கி பெல்ஜியம், அயர்லாந்து, டென்மார்க் வரை பல வெளிநாடுகள் வரை நீளுகிறது.

இந்த பணமோசடிக்காக ஸ்கிம்மர் மிஷின் மற்றும் போலி ஏடிஎம் கார்டுகள் தயாரிக்கும் மேக்னடிக் ஸ்டிரிப் ரீடர் மிஷின்களை ஆன்லைன் மூலம் இக்கும்பல் வாங்கியுள்ளது. ஸ்கிம்மர் மிஷின் மூலம் திருடும் தகவல்களை போலி ஏடிஎம் கார்டுகளில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த தகவல்களைக் கொண்டு புதுச்சேரியில் இயங்கும் ஒரு கம்ப்யூட்டர் சென்டர் பெயரில் வாங்கிய ஸ்வைப்பிங் மிஷின் மூலம் பல கோடி பணத்தை திருடியுள்ளனர். அத்துடன் கடைகளில் ஸ்வைப்பிங் மிஷின் வைத்திருக்கும் கடைக்காரர்களையும் கமிஷன் தருவதாகக் கூறி இந்த மோசடி வலையில் வீழ்த்தியுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

40 நாள் தலைமறைவு

இவ்வழக்கில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தியவர், டாக்டர், வியாபாரிகள் தொடங்கி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியா வரை 10 பேர் கைதாகியுள்ளனர்.

இவ்வழக்கின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 40 நாட்களைத் தாண்டி தலைமறைவாக உள்ள அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள சந்துருஜிதான் இதில் மூளையாக செயல்பட்டதாக சிபிசிஐடி தரப்பு குறிப்பிடுகிறது. சந்துருஜிக்கு கட்சிகளைத் தாண்டி பலருடன் தொடர்பு இருந்ததும், அடிக்கடி அவர் வெளிநாடு சென்று வந்த விவரங்களையும் சேகரித்து விசாரணை நடந்து வருகிறது.

“சந்துருஜியை பிடித்தால் மட்டுமே இந்த பெரும் பண மோசடியில் யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் என்பது தெரியவரும். அதனால் அவரை 5 தனிப்படையினர் தேடி வருகின்றனர்’’என்று சிபிசிஐடி எஸ்எஸ்பி ராகுல் அல்வால் குறிப்பிடுகிறார்.

முக்கிய பிரமுகர்கள் தொடர்பா?

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேச செயலர் ராஜாங்கம் கூறும்போது, “இவ்வழக்கில் முக்கிய கட்சி பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கை மூடி மறைக்க முயற்சி நடக்கிறது. இங்குள்ள மக்கள் தொடங்கி வெளிநாட்டவரும் பல கோடிகளை இழந்துள்ளனர். பணத்தை திருடும் நெட்வொர்க் புதுச்சேரி தொடங்கி வெளிநாடு வரை பரவியுள்ளது. சர்வதேச குற்றவாளிகளும் இதில் ஈடுபட்டுள்ளதால் சிபிசிஐடி வசமுள்ள இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கொண்டு விசாரித்தால் அனைவரையும் விசாரிக்க முடியும்” என்றார்.

பல்வேறு வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு இருப்பதால் வங்கிகளின் ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல மேலாளருக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் சார்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வர் விளக்கம்

ஏடிஎம் வழக்கு தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, “விசாரணையில் வெளிநாட்டவர் தொடர்பு குறித்து சிறு தகவல்தான் கிடைத்துள்ளது. ஆதாரப்பூர்வ முழு தகவல் கிடைத்த பிறகே அடுத்தகட்டம் குறித்து கருத்து தெரிவிக்க முடியும். இவ்வழக்கில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை. சந்துருஜியை விரைவில் பிடித்து, அவரோடு தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரசு கைது செய்யும்" என்று உறுதியாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x