Published : 29 Oct 2024 02:46 AM
Last Updated : 29 Oct 2024 02:46 AM

ஆட்சி, அதிகாரத்தில் பகிர்வு குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்: செல்வபெருந்தகை

சென்னை: தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பகிர்வு குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை தெரிவித்தார்.

விக்கிரவாண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், நம் கட்சியின் செயல்திட்டங்களை ஏற்றுக் கொண்டு நம்மோடு பயணிக்கும் கட்சிகளுக்கு நாம் ஆட்சிக்கு வந்ததும் ஆட்சி, அதிகாரத்தில் பகிர்வு அளிக்கப்படும்" என்று அதிரடியாக அறிவித்தார். இந்த கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை முன்னிலையில் திரு.வி.க.நகர் தொகுதியைச் சேர்ந்த பாஜகவினர் 23 பேர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர். அப்போது செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் பேசியதாவது: நடிகர் விஜய் புதிய கட்சி ஆரம்பித்துள்ளார் வாழ்த்துக்கள். அரசியல் அமைப்பு சட்டப்படி ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மக்களுக்காக குரல் கொடுக்கலாம். போராட்டங்களை முன்னெடுக்கலாம். பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை எல்லாம் இருக்கிறது. விமர்சனங்களும் செய்யலாம். அந்த வகையில் நடிகர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். அவர் பாஜக, திமுகவைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிப்பார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாபெரும் தலைவர், அவரைப் பற்றியும் விஜய் பேசியிருக்கிறார். பெரியாரும் காங்கிரஸின் முன்னாள் தலைவர். அவரது பகுத்தறிவு கருத்துகளை உள்வாங்கியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி பேசியதை வரவேற்கிறோம். அதுபோல வீரமங்கை வேலு நாச்சியாரைப் பற்றியும் பேசியுள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அஞ்சலை அம்மாள் பற்றியும் பேசியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர்களை விஜய் கையில் எடுத்துள்ளார். தேச விடுதலைக்காக, சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட தலைவர்களைப் பற்றியெல்லாம் பேசியுள்ளார். அதெல்லாம் சரிதான். அக்கட்சி எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விஜயின் கொள்கைகள், கோட்பாடுகள் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களின் வாக்குகள் எதிரணியினருக்கு போகாமல் மடைமாற்றம் செய்யத்தான் பயன்படும். எதிர்ப்பு வாக்குகள் விஜய்க்கு போகலாம். இது குறித்து இப்போது ஆருடம் சொல்ல முடியாது. மத்திய, மாநில அளவில் அதிகாரத்தை பார்த்தவர்கள்தான் நாங்கள். அதனால் எங்களுக்கு அதிகாரத்தின் மீது நாட்டம் கிடையாது. அதிகாரம் எங்களுக்கு புதிது கிடையாது. மக்கள் தீர்மானித்தால் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி சாத்தியம். ஆட்சி, அதிகாரத்தில் பகிர்வு குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று செல்வபெருந்தகை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x