Published : 29 Oct 2024 12:18 AM
Last Updated : 29 Oct 2024 12:18 AM
மதுரை: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இன்று பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த ஆப்பநாடு மறவர் சங்க செயலர் குணசேகரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என கடந்தாண்டு செப்டம்பரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து ரூ.3 கோடியில் நினைவிடம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு மண்டபம் கட்ட தேர்வு செய்திருக்கும் இடம் பொதுமக்கள் வாரச்சந்தை நடத்தும் இடம். இந்த இடத்தை நினைவு மண்டபத்துக்காக கையகப்படுத்தினால் சாதாரண வியாபாரிகள் பாதிக்கப்படுவர். மேலும் இம்மானுவேல் சேகரன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல. அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் உரிமைக்காக போராடிய தலைவர்.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக மட்டுமே பொதுப்பணத்தை பயன்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கான ஏராளமான திட்டங்கள் கிடப்பில் உள்ளன. நிதி ஒதுக்கப்படாமல் பல்வேறு திட்டங்கள் பாதியிலேயே நிற்கின்றன.
எனவே, இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தும், பொதுமக்கள் பணத்தில் இமானுவேல் சேகரனின் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பரமக்குடி நகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT