Published : 29 Oct 2024 12:03 AM
Last Updated : 29 Oct 2024 12:03 AM
கோவை: தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகரின் முதல் மாநாடு பேச்சை வைத்து கொண்டு எந்த கருத்தையும் கூற முடியாது. எதிர்வரும் நாட்களில் அவரது செயல்பாடுகளை வைத்து தான் கருத்து கூற முடியும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு தாயின் அரவணைப்பில் மட்டும் வளரும் பெண்குழந்தைகளுக்கான ‘மோடியின் மகள்’ திட்டத்தின் கீழ் புத்தாடை, இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை, வடகோவை பகுதியில் அமைந்துள்ள குஜராத் சமாஜ் வளாகத்தில் திங்கள்கிழமை மாலை நடந்தது.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் பேசும்போது, “இன்றைய பெண்களுக்கு முன்னோடியாக வாழ்க்கை வழிகாட்டியாக ராதிகா சரத்குமார் உள்ளார். அவரும் அவரது கணவர் சரத்குமார் இருவரும் பாஜக-வில் இணைந்து கடந்த மக்களவை தேர்தலில் மிக சிறப்பாக பணியாற்றினர். கட்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ‘மோடியின் மகள்’ திட்ட குழந்தைகளின் கல்வியை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவையான உதவிகள் செய்து தரப்படும்” என்றார்.
ராதிகா சரத்குமார் பேசும் போது, தனிப்பட்ட முறையில் “பெண் குழந்தைகளை வளர்ப்பது எத்தகைய சவால் நிறைந்தது என்பதை நான் அறிவேன். நீங்கள் சிங்கம் போல் செயல்பட வேண்டும். மகள்களுக்கு சிறப்பான வழியை காட்ட வேண்டும். உண்மை உங்களிடம் இருந்தால் வெற்றி நிச்சயம்” என்றார்.
தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும் போது, “கோவை மக்கள் சேவை மையம் சார்பில் 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட தாயின் அரவணைப்பில் மட்டும் வாழும் பெண் குழந்தைகளை தத்தெடுத்து ‘மோடியின் மகள்‘ திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் பல உதவிகளை செய்து வருகிறோம்.
இந்தியாவில் அதிக இளைஞர்கள் கொண்ட கட்சியாக பாஜக உள்ளது. தமிழகத்தில் நடிகர் ஒருவர் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார். மாநாட்டு பேச்சை வைத்து கொண்டு எந்த கருத்தையும் கூற முடியாது. எதிர்வரும் நாட்களில் அவரது செயல்பாடுகளை வைத்து தான் கருத்து கூற முடியும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைக்கும் கட்சி பாஜக மட்டும் தான். ஆர்எஸ்எஸ் வழி சார்ந்து நடக்கும் எங்களை போன்ற கட்சிக்கு பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு எப்போதும் கிடையாது” என்றார்.
நடிகை ராதிகா சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, “கோவையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. டாஸ்மாக் மதுபான விற்பனை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். நடிகர் விஜய்-க்கு வாழ்த்துக்கள். சமத்துவ மக்கள் கட்சி கொடியின் வண்ணத்தையும் அவர் பயன்படுத்தியுள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT