

காரைக்குடி: "ஆளுநர் பதவி குறித்து சர்ச்சையாக விஜய் பேசியது அறிவிலித்தனம்" என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று மாலை பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "ஆளுநர் தேவையில்லை என்று கூறும் விஜய்யை மக்கள் தேவையில்லை என கூறினால் எப்படி இருக்கும்? அவர் அரசியலமைப்பை படிக்க வேண்டும். ஆளுநர் பதவி குறித்து சர்ச்சையாக பேசியது அறிவிலித்தனம். திமுகவை பின்தொடர்ந்து பேசினால்தான் நமக்கு சோறு வேகும் என விஜய் நினைக்கிறார்.
திராவிட மாடல் என்பது தேசிய வெறுப்பு அரசியலின் ஆணி வேர். பிரதமரே திராவிடத்தைச் சேர்ந்தவர் தான். நாட்டின் சரித்திரம், தான் யார் என்று தெரியாமல் விஜய் பேசுகிறார். திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும். இனத்தை அல்ல. இது புரியாமல் கால்டுவெல் கற்பித்ததை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். திராவிட சித்தாந்தத்தை பேசும் விஜய்யும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.
கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியது தேசிய தலைமைதான். பாஜக கூட்டணியில் சேர பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். நாங்கள் ஏற்கெனவே கூட்டணியாக தான் உள்ளோம். கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் எங்களுக்கு தனிப்பெரும்பான்மை இருந்தது. எனினும் கூட்டணி ஆட்சி தான் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி முயற்சி எடுத்துள்ளோம். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு கருத்துரை வழங்காமல் உயர் கல்வித் துறை அமைச்சர் தவிர்ப்பது சரியல்ல" என்று ஹெச்.ராஜா கூறினார்.