Published : 28 Oct 2024 09:05 PM
Last Updated : 28 Oct 2024 09:05 PM
சென்னை: திருவேற்காடு கோயில் ரீல்ஸ் வீடியோ விவகாரத்தில், கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழு பெண் உறுப்பினர் மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது, அக்கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த வளர்மதி, 12 பெண்களுடன் நடனமாடியது போன்ற ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்டுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர் வளர்மதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து, வரும் அக்.29-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. தற்போது, வளர்மதிக்கு அறங்காவலர் குழு உறுப்பினருக்கான பணி காலம் முடிவடைந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு, அது குறித்து இந்து அறநிலையத்துறையிடம் வளர்மதி விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ‘கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கோயிலில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு தின வழிபாடுகளில் கலந்து கொண்ட பின், கோயில் பெண் பணியாளர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுடன் கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களில் பங்கேற்றேன். கோயில் திருப்பணிகளில் ஆர்வமுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வரும் எனது செயல்பாடுகளை விரும்பாத சிலர் அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.
பெண் பணியாளர்கள் அன்போடு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதில் பங்கேற்றேனே தவிர, கருமாரியம்மன் புகழுக்கும், கோயில் நிர்வாகத்துக்கும், அதன் நற்பெயருக்கும் அவப்பெயரையோ, களங்கமோ ஏற்படுத்த நினைத்ததில்லை. தவறாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம், வீடியோக்களினால், பக்தர்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்,’ என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT