Published : 28 Oct 2024 07:21 PM
Last Updated : 28 Oct 2024 07:21 PM
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் முத்துநகர், சதாப்தி, காரைக்கால், ஏற்காடு உள்பட 32 ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை அக்.31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, முக்கிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. குறிப்பாக, சென்னையில் இருந்து தென், மத்திய மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான விரைவு ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.
குறிப்பாக, முக்கிய வழித்தடங்களில் அதிக அளவில் காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. எனவே, பயணிகள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, காத்திருபோர் பட்டியல் அதிகமுள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து இயக்கப்படும் சதாப்தி, முத்துநகர், காரைக்கால், ஏற்காடு உள்பட 32 ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - கோவை இடையே அக்.30, நவ.3-ம் தேதி இரு மார்க்கமாக இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயிலில் ஒரு சேர் கார் பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் - நாகர்கோவிலுக்கு நவ.1-ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயிலில் ஒரு பெட்டியும், மறுமார்க்கமாக, நவ.3-ம் தேதி நாகர்கோவில் - சென்னைக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் ஒரு பெட்டியும் கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூர் - தூத்துக்குடிக்கு அக்.30, நவ.1, 3, 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் முத்துநகர் விரைவு ரயிலில் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக, தூத்துக்குடி - சென்னை எழும்பூருக்கு அக்.29, 31, நவ.2, 4 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் முத்துநகர் விரைவு ரயிலில் ஒரு பெட்டி கூடுதலாக சேர்த்து இயக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூர் - காரைக்காலுக்கு அக்.30, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயிலில் ஒரு பெட்டியும், மறுமாக்கமாக, காரைக்கால் - சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் நவ.2, 3 ஆகிய தேதிகளில் ஒருபெட்டியும் சேர்த்து இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர் - தஞ்சாவூருக்கு அக்.29, 30, நவ.1, 2, ஆகிய தேதிகளில் இயக்கப்படும் உழவன் விரைவு ரயிலில் ஒரு பெட்டி இணைத்து இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கமாக, தஞ்சாவூர் - சென்னை எழும்பூருக்கு அக்.30, 31, நவ.2, 3 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயிலில் ஒரு பெட்டி கூடுதலாக சேர்த்து இயக்கப்பட உள்ளது.
மொத்தம் 32 விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி சேர்க்கப்பட உள்ளது. வரும் 29-ம் தேதி முதல் நவ.4-ம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT