Published : 28 Oct 2024 06:35 PM
Last Updated : 28 Oct 2024 06:35 PM

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாளை முதல் மீண்டும் ரயில் சேவை: 14 மாதத்துக்கு பிறகு தொடக்கம்

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில் நாளை (அக்.29) முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்குகிறது. 14 மாதங்களுக்கு பிறகு ரயில்சேவை தொடங்குவதால், பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். தினசரி இரு மார்க்கமாகவும் தலா 45 சேவைகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை எழும்பூர் - கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.274.20 கோடியில் புதிய பாதைக்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கியது.

இப்பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து நேரடியாக பறக்கும் மார்க்கத்தில் ரயில் சேவைகளை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இதற்கிடையில், ஒரு ஆண்டு கடந்தும் 4-வது பாதை பணி முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டதால், பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதற்கு பதில்அளித்த ரயில்வே நிர்வாக அதிகாரிகள், "கடற்படை அனுமதி பெறுவதில் தாமதத்தால், பணிகள் முடிவடைவதில் காலதாமதம் ஏற்படுகிறது. பணிகளை விரைவில் முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் மார்க்கத்தில் வழக்கமான ரயில் சேவை நாளை (அக்.29) முதல் தொடங்கவுள்ளது.

முன்பு 120 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை துண்டிக்கப்பட்டபிறகு, 80 மின்சார ரயில்கள் சேவை இயக்கப்படுகின்றன. நாளை முதல் இருமார்க்கமாகவும் 90 ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. சில பணிகள் முடிந்தபிறகு, முழுமையாக ரயில்சேவை தொடங்கும்” என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x