Published : 28 Oct 2024 05:09 PM
Last Updated : 28 Oct 2024 05:09 PM

“அதிமுக போராட்டத்தின் மறுவடிவமே விஜய்யின் தவெக மாநாடு” - ஆர்.பி.உதயகுமார் கருத்து

மதுரையில் நடந்த ஜெ., பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உரையாற்றினார்.

மதுரை: “விஜய் கட்சி தொடங்கியதால் அதிமுகவுக்கு எள் முனையளவும் பாதிப்பில்லை. அதிமுக போராட்டத்தின் மறு வடிவம்தான் விஜய்யின் தவெக மாநாடு,” என்று எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

30-ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி பசும்பொன் வருகிறார். அவருக்கு அதிமுக ஜெ., பேரவை சார்பில் வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டமும், பயிற்சி வகுப்பும் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் இன்று (அக்.28) நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். அமைப்புச் செயலாளர் மகேந்திரன், தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்தநாள் மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு, பொதுச்செயலாளர் கே.பழனிசாமி வருகின்ற 30-ம் தேதி காலை 10:30 மணி அளவில் பசும்பொன் கிராமத்துக்கு வந்து தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அவருக்கு ஜெ. பேரவை சார்பில் 2,000-க்கும் மேற்பட்ட தொண்டர் படையினர், சீருடை அணிந்து வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து பசும்பொன் வரை இந்த தொண்டர் படையினர் செல்கின்றனர்.

விஜய்யின் மாநாடு சிறந்த தொடக்கம். கொடி ஏற்றி பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார். இளைஞர்களின் தன்னெழுச்சியாக மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த தமிழகமும் திமுகவுக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதற்கு, அதிமுக முன்னெடுத்த போராட்டம் எப்படி ஒரு சான்றாக இருக்கிறதோ, அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடும் உள்ளது.

உதயநிதியை துணை முதல்வராக்கி, குடும்பத்தை முன்னிலைப்படுத்திய திமுக ஆட்சியை இன்றைய இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கருணாநிதி தனது மகனை முன்னிறுத்தியதால், ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்கக் கூடாது என்று எம்ஜிஆர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். அப்படிப்பட்ட எம்ஜிஆரை சுட்டிக்காட்டி வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார் விஜய். தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் கே.பழனிசாமியை முதல்வராக்க மக்கள் தயாராகி விட்டனர்.

கலைத் துறை கருணாநிதி குடும்பத்தில் சிக்கி சின்னபின்னமாகி உள்ளது. தொழில் துறையும் சபரீசன் பிடியில் சிக்கி உள்ளது. முதல்வராக கே.பழனிசாமி இருந்தபோது திரைப்படம் வெளியிட அரசிடம் விஜய் ஒத்துழைப்பை நாடியபோது அவருக்கு உதவினார். இது விஜய்க்கு நன்றாகவே தெரியும். விஜய் கட்சி தொடங்கியதால் அதிமுகவுக்கு எள்முனை அளவும் பாதிப்பு இல்லை. எங்களுடைய போராட்டத்தின் மறு வடிவமாக விஜய்யினுடைய தவெக மாநாட்டை பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x