Published : 28 Oct 2024 08:28 AM
Last Updated : 28 Oct 2024 08:28 AM

விஜய் கட்சிக் கொள்கை எங்களது கொள்கைக்கு நேரெதிரானது: சீமான் கருத்து

மதுரை: விஜய் கட்சிக் கொள்கை எங்களது கட்சிக் கொள்கைக்கு நேரெதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின. கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர், கொள்கைகளை விளக்கி விஜய் பேசினார். அப்போது அவர், “கொள்கை கோட்பாட்டு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்த்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து.” எனக் கூறியிருந்தார்.

இது குறித்து சீமானிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான், “திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கண் என்று அவருடைய கருத்துகள், எங்களுடைய கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. கருவாட்டு சாம்பார் என்பதுபோல் இருக்கிறது விஜய் இரண்டையும் சேர்த்துப் பேசியிருப்பது.

இது என் நாடு, என் தேசம், இங்கு வாழுகின்ற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். எங்களுடைய கொள்கை தமிழ் தேசம். எனவே எங்கள் இருவருடைய கொள்கையும் ஒன்றாக இல்லை. மொழிக் கொள்கையிலும் முரண்பாடு இருக்கிறது. மற்றபடி, சில விஷயங்களில் நாங்கள் சொல்வதையே அவரும் சொல்கிறார்.” என்றார்.

முன்னதாக நேற்று காலை விஜய் மாநாட்டுக்கு முன்னர் அளித்தப் பேட்டியில், “தவெக - நாதக கூட்டணி ஏற்படுமா? என்பதை காலம் தான் தீர்மானிக்கும். இது குறித்து விஜய் முடிவெடுக்க வேண்டும்.” என்று கூறியிருந்தார். இந்நிலையில் மாநாட்டுக்குப் பின்னர் அளித்தப் பேட்டியில், தவெக - நதக இடையே கொள்கை முரண் இருப்பதாகக் கூறியிருக்கிறார் சீமான். இதனால் தவெக - நதக கூட்டணிக்கான எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும், தவெக மாநாட்டில் விஜய் பேச்சுக்களின் அடிப்படையில் அரசியல் நிபுணர்கள் பலரும் விஜய் கட்சி வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நதக வாக்குவங்கிக்கு நிச்சயம் சவாலாக இருக்கும் எனக் கணிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x