Published : 28 Oct 2024 03:09 AM
Last Updated : 28 Oct 2024 03:09 AM

பெண் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு மகளிர் சிறுநீரியல் சங்கம் சென்னையில் தொடக்கம்

தமிழகத்தில் உள்ள பெண் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு மகளிர் சிறுநீரியல் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மூத்த சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் என்.ராஜமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை: அனைவருக்கும் சேவை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள பெண் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு மகளிர்சிறுநீரியல் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்காக “தமிழ்நாடு மகளிர் சிறுநீரியல் சங்கம் (Tamilnadu Magalir Urological Association - TAMURA)” சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது. தமிழகத்தின் மூத்த சிறுநீரகஅறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் என்.ராஜமகேஸ்வரியின் முயற்சியால் இந்த சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்நிகழ்வில் மூத்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்களான மருத்துவ பேராசிரியர்கள் ஏ.ராஜசேகரன், எஸ்.வரதராஜன், எஸ்.சுப்பிரமணியம், எஸ்.துரைசாமி, பி.பி.சிவராமன், பி.துரைசாமி, என்.முத்துலதா, டி.ஸ்ரீகலா பிரசாத், ஆயிஷா, ஹேமலதா, சரஸ்வதி, அனு ரமேஷ், அரசி மற்றும் முதுநிலை மருத்துவ மாணவிகள் பங்கேற்றனர்.

நிகழ்வில் மருத்துவர்கள் என்.ராஜமகேஸ்வரி, ஹப்சா பாத்திமா, சியாமளா கோபி, சுஸ்மிதா கோத்தப்பள்ளி ஆகியோர் சிறுநீரக அறுவை சிகிச்சை தொடர்பான தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.அப்போது மருத்துவர் என்.ராஜமகேஸ்வரி பேசியதாவது: ஒரு காலத்தில் பெண்கள் என்றால் வெளியே செல்லக்கூடாது. வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. பின்னர், பள்ளி ஆசிரியர், மகப்பேறு மருத்துவர் பணிக்கு செல்லலாம் என்ற நிலை மாறியது. தற்போது, நாசா விஞ்ஞானி உட்பட அனைத்து பணியிடங்களிலும் பெண்கள் உள்ளனர். அந்த அளவுக்கு பெண்கள் முன்னேறியுள்ளனர்.

120 பெண் மருத்துவர்கள்: இந்தியாவில் 6,008 சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 5,888, பெண்கள் 120 (2 சதவீதம்) இருக்கின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 732 பேரில், ஆண்கள் 700, பெண்கள் 32 (4.4 சதவீதம்) ஆவர். இது இந்தியா அளவில் பெண்களின் சதவீதம் 4-ல் ஒரு பங்கு ஆகும். தமிழகத்தில் ஒரு காலத்தில் ஓரிரு பெண் சிறுநீரக அறுவை சிக்சிசை மருத்துவர்கள் மட்டுமே இருந்தனர். அது தற்போது 32-ஆக அதிகரித்திருப்பது மிகப்பெரிய மாற்றம்தான். இது பெண்களின் கல்வி மற்றும் வளர்ச்சியால் மட்டுமே சாத்தியமாகி உள்ளது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெண் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களின் பங்களிப்பு மதிப்புமிக்கதாக உள்ளது. ஆண் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு இணையாக பெண் மருத்துவர்களும் வளர்ந்து வருகின்றனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகம் முன்னணியில் இருந்து வருகிறது.

வீரமங்கைகள்: அவர்களுக்கு சமூகம் மற்றும் குடும்ப ஆதரவு பெருகிவருவதோடு, அவர்களின் பங்களிப்புக்கான பாராட்டுதல்களும் அதிகரித்துள்ளன. மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக இத்துறையில் பெண்கள் முன்னேறி வருகின்றனர். இத்துறையில் மிளிர்ந்துவரும் பெண்களை வீரமங்கையாக கொண்டாடுவோம். தமிழகத்திலுள்ள பெண் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்காக, அவர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு மகளிர்சிறுநீரியல் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. பெண் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களின் கற்றல், பகிர்தல், அறிவு, திறன் போன்றவை சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த சங்கத்தின் மூலம் பெண் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களை அடையாளப்படுத்தி, அவர்களின் சாதனைகள் அங்கீகரிக்கப்படும். அவர்களுக்கு தகுந்தசூழல் உருவாக்கப்படும். அவர்கள் நவீன தொழிநுட்பத்தை படிப்பதற்கான வழிக்காட்டுதல்கள் வழங்கப்படும். முக்கியமாக, அனைவருக்கும் பெண் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களின் சேவை கிடைக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு மருத்துவர் என்.ராஜமகேஸ்வரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x