Published : 28 Oct 2024 05:04 AM
Last Updated : 28 Oct 2024 05:04 AM

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி; ஆளுங்கட்சி அத்துமீறலை தடுக்க வேண்டும்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நாளை (அக்..29) நடைபெற உள்ளது. இப்பணியில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் தெரியவந்தால் அதைத் தடுக்க அதிமுகவினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, அடுத்த ஆண்டுஜன.1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடைபெற உள்ளது. அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (அக்.29) வெளியிடப்படுகிறது. நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலை திருத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் நவ.9 (சனி), 10 (ஞாயிறு), நவ.23 (சனி), 24 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜன.6-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியில் அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் கட்சி சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு அளவிலான நிர்வாகிகள், அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள நிலை முகவர்கள் ஆகியோர் தனி கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்கள், புதிதாக குடிவந்துள்ளவர்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒருநபரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பின், அதை அடையாளம் கண்டு நீக்க வேண்டும். வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இதற்கு உரிய படிவத்தை பெற்று பூர்த்திசெய்து, தொடர்புடைய முகாம்களில் வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் இருப்பதாக தெரியவந்தால், உடனுக்குடன் அதுதொடர்பான புகார்கள் தொடர்புடைய தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உரிய தீர்வுகாண வேண்டும்.

அதிமுக சார்பில் நிலை முகவர்கள் அமைக்கப்படாத வாக்குச்சாவடிகளுக்கு உடனடியாக நிலை முகவர்களை நியமிக்க வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில், அதிமுக சார்பில் ஆங்காங்கே வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை முனைப்போடு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x