Published : 28 Oct 2024 05:00 AM
Last Updated : 28 Oct 2024 05:00 AM

தமிழகம் முழுவதும் இன்றுமுதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கிளாம்பாக்கத்தில் அமைச்சர்கள் ஆய்வு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று ஆய்வு செய்தனர் உடன் துறை உயர் அதிகாரிகள் காகர்லா உஷா, சுன்சோங்கம் ஜடக், அன்சுல் மிஸ்ரா. படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 28-ம் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறைநடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இன்று வழக்கமான பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 700 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் பேருந்துகள் வாயிலாக 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: கிளாம்பாக்கத்தில் அரசு பேருந்துகள், ஒப்பந்த அடிப்படையிலான தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகளை நிறுத்திவைக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 ஆயிரம் பேர் அமர இருக்கை, இலவச மருத்துவமனை, ஆம்புலன்ஸ், பாதுகாப்புக்காக காவல் அதிகாரிகள், 3 மடங்கு அதிகமாக தூய்மை பணியாளர்கள், 8 ஏடிஎம் இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 18 இயந்திரங்கள், தாய்மார்கள் பாலூட்ட 3 அறைகள், இலவச ட்ராலிகள், 140 தங்குமிடம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் நெரிசல் இல்லாமல் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கிளாம்பாக்கம்: புதுச்சேரி, கடலூர், திருச்சி, சிதம்பரம், மதுரை,தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் வழி செல்லும் பேருந்துகள். கோயம்பேடு: கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி வழியாக செல்லும் பேருந்துகள். மாதவரம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகள்.பிரத்யேக உதவி எண்கள்: 7845700557, 7845727920, 7845740924.புகார் தெரிவிப்பதற்கான எண்கள்: அரசு பேருந்துகள்: 94450 14436 ஆம்னி பேருந்துகள்: 044-24749002, 26280445, 26281611.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x