Published : 17 Apr 2014 02:52 PM
Last Updated : 17 Apr 2014 02:52 PM
சுடுகாட்டு கூரை அமைப்பதில் ஊழல் நடந்ததாகத் தொடரப் பட்ட வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
கடந்த 1995, 1996-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தின்போது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக டி.எம்.செல்வகணபதி செயல்பட்டார். அப்போது, ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுடுகாட்டு கூரைகள் அமைப்பதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ. வழக்குகளுக்கான சென்னை 9-வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.மாலதி வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
அப்போதைய அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்யமூர்த்தி, மாவட்ட திட்ட அதிகாரி எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்கள் பதவியின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதோடு, பாரதி என்பவருடன் சேர்ந்து அரசுக்கு ரூ.23 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அவர்கள் 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்ய வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT