Published : 27 Oct 2024 07:28 PM
Last Updated : 27 Oct 2024 07:28 PM
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக் கழக தலைவராக மாறக்கூடாது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் செய்துள்ளார். மேலும் விஜய் அதிகார அரசியலுக்காக திமுக வழியில், ஓட்டு வங்கி அரசியலுக்காக சீமான் பாதையில் செயல்பட முடிவு செய்து இருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய்யின் வீர வசனங்கள் அடங்கிய உரை ஓர் அரசியல் திரைப்படத்தை பார்ப்பது போல இருந்தது. நடிகர் விஜய் அவர்களின் கன்னி பேச்சு என்பதால் இது குறித்து விமர்சனங்களை வைக்க விரும்பவில்லை.
தேர்தல் அரசியலுக்காகவும் ஓட்டு வங்கிக்காகவும் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத வகையில், நாம் தமிழர் கட்சி தலைவர் செபாஸ்டின் சைமனின் மறுஉருவமாக, அரசியல் நடிகர் ஜோசப் விஜய் விளங்குவார் என்பது மட்டும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
திமுக மாநாட்டிற்கு கூட்டத்தை கூட்ட, உடன்பிறப்பே! கையில் காசு இல்லை என்பதற்காக, வீட்டில் இருக்கும் சாமி உண்டிகளை உடைக்காதே! மனைவியின் தாலியை விற்காதே! மூக்குத்தியை கழற்றாதே! என்று தொண்டர்கள் நினைக்காததை சுட்டிக்காட்டி செய்ய வைத்து, பல கோணங்களில் உணர்வு பூர்வமாக பேசி, ஏமாற்றி கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது போல, நடிகர் விஜயும், இருசக்கர வாகனத்தில் வராதே! கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம் என்றெல்லாம் விதவிதமாக, கூட்டம் கூட்டுவதற்காக விளம்பரத்திற்காக திமுகவின் குரலில் பேசியிருந்தார்.
பாதுகாப்பாக வாருங்கள்! அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டுவோம்! என்று அழைப்பு விடுத்த நடிகர் விஜய், தொண்டர்களின் நலனுக்கு பாதுகாப்பற்ற முறையில் குடி தண்ணீர், உணவு, கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் அளிக்காமல் மாநாட்டுக்கு வந்தவர்களை அலை கழித்தது ஏன்? தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் விருந்தினர்களுக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் சொகுசு அறைகளுக்கு இணையான ஆறு கேரவன்களை ஏற்பாடு செய்த நடிகர் விஜய், தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி வந்த பல்லாயிரம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநாட்டில் குடிதண்ணீர், உணவு, கழிவறை, மருத்துவ வசதி போன்றவற்றை முறையாக திட்டமிடாதது ஏன்?
விழுப்புரத்தில் இன்று நடக்கும் மாநாட்டில் இளைஞர்கள் பெண்கள் தொண்டர்கள் ரசிகர்கள் உள்ளிட்ட மூன்று லட்சம் மக்கள் கூட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநாட்டு ஏற்பாடுகளில் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் விளம்பரத்திற்காக, மேடை அமைப்பு, மாநாட்டு திடல் அமைப்பு, முக்கிய தலைவர்கள் தமிழ் மன்னர்கள் உள்ளிட்டவர்களின் கட் அவுட்டுகள், ஏற்பாடுகள் என ஒரு அரசியல் கட்சிக்குரிய ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக திட்டமிட்டு செய்துள்ளார்.
தன்னுடைய படம் வெளிவரும் பொழுது எப்படி கண்ணும் கருத்துமாக, திட்டமிடுவாரோ? அதே முறையில் மாநாட்டுகள் ஏற்பாடுகளை சுயநலத்துடன் செய்த விஜய், மாநாட்டுக்கு வந்த மக்கள் நலத்தில், மனிதநேயத்துடன் போதிய அக்கறை காட்டாதது ஏன்? நடிகர் விஜய் தன்னுடைய விளம்பரத்திற்கும் அரசியல் மாநாட்டு விளம்பரத்திற்கும் காட்டிய அக்கறை தொண்டர்களின் நலனில் காட்டவில்லை என்பது, தொண்டர்கள் பாதிப்புகள் மற்றும் மாநாட்டின் நிகழ்வுகளில் தெளிவாக தெரிகிறது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் முதல் அரசியல் மாநாட்டிற்கு வரும் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மட்டும் முறையாக சிந்தித்து சரியான முறையில், போதிய அக்கறையுடன் திட்டமிட்டு செயல்படுத்தப்படவில்லை என்பது தமிழக வெற்றி கழக தொண்டர்களின் கருத்தாக உள்ளது.
குடிக்க தண்ணீர் இல்லை. ஆசையுடன் எழுச்சியுடன் நம்பிக்கையுடன் விஜய்யைக் காண வந்தவர்களுக்கு பசி என்று தவிப்பவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு வழங்கப்படவில்லை. சரியான முறையில் கழிப்பறை வசதிகள் செய்யப்படவில்லை. கழிப்பறைகளில் சுத்தமாக தண்ணீரும் இல்லை. மிக முக்கியமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி சரியான முறையில் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்படவில்லை. பல நூறு தொண்டர்கள், குழந்தைகள், பெண்கள் மயக்கம் அடைந்து தண்ணீர் கிடைக்காமல் உணவு கிடைக்காமல் அவதிப்படுவதை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் காண முடிகிறது.
தமிழக வெற்றிக் கழக மாநாடு பொறுத்தவரை நடிகர் விஜய் தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் தலைவராக மாற்ற கட்டமைக்கப்பட்ட விளம்பரம், மாநாட்டு மேடை, என மாநாட்டின் பிரம்மாண்டம் குறித்து காட்டிய அக்கறையை, பெருந்தன்மையுடன் தன்னை நம்பி வந்த தொண்டர்கள் குறித்து முழுமையான அக்கறையுடன் செயல்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
வழக்கமாக திரைத்துறையினரைப் பொறுத்தவரை திரைப்படத் தயாரிப்புக்கு ரூ.5 கோடி, விளம்பரத்துக்கு 15 முதல் 20 கோடி ரூபாய் என்ன மூன்றில் இருந்து நான்கு மடங்கு விளம்பரத்திற்காக செலவிடுவார்கள். அதே விளம்பர கலாச்சாரத்தில், நடிகர் விஜயும் தன்னைத் தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் தலைவராக கட்டமைப்பதிலும் மாநாட்டு பிரம்மாண்டத்திலும், பல கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரத்துக்கும், மாநாட்டு ஏற்பாடுகளுக்கும் நிகழ்ச்சியின் வெற்றிக்கும் முக்கியம் கொடுத்து கவனம் செலுத்தினார்.
ஆனால் விஜயை நம்பி வந்த தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் நலனுக்காக, குடிநீர் உணவு, கழிவறை, மருத்துவம் என முக்கிய அடிப்படைத் தேவைகளுக்காக போதி அக்கறையுடன் பெருந்தன்மையுடன் மனிதநேயத்துடன், பணத்தை செலவு செய்யாமல் முழுவதுமாக சிக்கனத்தை கடைப்பிடித்து தொண்டர்கள் நலனை புறக்கணித்தது அதிர்ச்சி அளிக்கிறது.
நடிகர் விஜய் தன் வசதிக்காக ஏழு கேரவன்களை திட்டமிட்டு உருவாக்கியது போல, மாநாட்டு மேடை பந்தலில் பிரம்மாண்டத்திற்காகவும், தமிழக அரசியலில் தன்னை மிகப்பெரிய பிம்பமாக காட்டிக்கொள்ளவும் செலவு செய்த பல கோடி ரூபாய், பணத்தில் சில கோடியை செலவு செய்து குடிநீர் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து தன்னுடைய தொண்டர்களின் மேல் போதிய அக்கறையை காட்டாதது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியில் உணர்வு பூர்வமாக தொண்டர்களை உசுப்பேத்தி, உற்சாகப்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்கு முயற்சி செய்யாமல், அரசியல் தன் வளர்ச்சிக்கு காட்டும் அக்கறையைப் போல, மனித நேயத்தோடு தன் குடும்பத்தில் ஒருவராக தொண்டர்களிடம் போதிய அக்கறையை காட்ட வேண்டும். மக்களின் வாழ்த்து மகேசன் வாழ்த்து (இறைவனின் வாழ்த்து) என்பதை நடிகர் விஜய் உணர வேண்டும்.
பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் விஜய் அரசியலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்தன. ஆனால் கடந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க, சைக்கிளில் சென்று திமுகவிற்கு மறைமுக ஆதரவு தெரிவித்து, வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களை திமுகவுக்கு ஆதரவாக திசை திருப்பிய நடிகர் விஜய், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மட்டும், நடிகர் விஜய் எனது நீண்ட கால நண்பர், அவரின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் என வஞ்சகப்புகழ்சியுடன் வாழ்த்து கூறியதை விஜய் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனக்கு ஜோசப் விஜய் நடிகர் விஜய் ஆக, சினிமாவிற்காக மாறியதற்கு முன்பிருந்தே தெரியும் என்ற அர்த்தத்தில் தன் வாழ்த்தை பதிவு செய்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய் என் நீண்ட கால நண்பர். அவரின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் என்று விஜய் சினிமா தொழிலை விட்டு அரசியல் தொழிலுக்கு வந்திருக்கிறார் என்கிற பாணியில், வாழ்த்து சொல்லி இருப்பதைப் புரிந்து கொண்டு ஊழல் திமுகவின் சூழ்ச்சி அரசியல் மற்றும் நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத அரசியலில் இருந்து விலகி மக்கள் நல அரசியல் செய்ய வேண்டும். இவ்வாறு ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT